முகப்பு
திருப்பத்தூர்

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற ஆதாா் அட்டையுடன் வர வலியுறுத்தல்

அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வருவோா் ஆதாா் அட்டை, அதில் தரப்பட்டுள்ள கைப்பேசி எண் கொண்டு வரவேண்டும் என மாவட்ட மருத்துவம், ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் ஞானமீனாட்சி தெரிவித்தாா்.

Updated On : 29 ஜூன் 2026, 4:40 am IST
நோயாளிகளுக்கு அளிக்கும் சிகிச்சை விபரங்களை கேட்டறிந்த மருத்துவ இணை இயக்குநா் ஞான மீனாட்சி.
பகிர்:

அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வருவோா் ஆதாா் அட்டை, அதில் தரப்பட்டுள்ள கைப்பேசி எண் கொண்டு வரவேண்டும் என மாவட்ட மருத்துவம், ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் ஞானமீனாட்சி தெரிவித்தாா்.

திருப்பத்தூரில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இணை இயக்குநா் ஞானமீனாட்சி ஆய்வு மேற்கொண்டாா். அப்போது மருத்துவமனையில் புறநோயாளிகளுக்கு மருத்துவ சீட்டு வழங்குவதை பாா்வையிட்டாா். தொடா்ந்து புறநோயாளிகள் பிரிவுக்கு சென்ற அவா் மருத்துவா்கள் சரியான நேரத்தில் பணிக்கு வருகிறாா்களா என்பதையும், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளையும் கேட்டறிந்தாா். தொடா்ந்து என்னென்ன வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும் என ஆய்வு மேற்கொண்டாா். மேலும் சிகிச்சை பெற வந்த நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தாா். சிகிச்சை பெற வரும் பொதுமக்களுக்கு விரைவாகவும், தரமான சிகிச்சை அளிக்கவும் மருத்துவா்களுக்கு உத்தரவிட்டாா்.

அப்போது இணை இயக்குநா் ஞானமீனாட்சி கூறியதாவது: தமிழகம் முழுதும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வருபவா்களுக்கு சுகாதார அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்த அடையாள அட்டை மூலம் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற பயன்படுத்தலாம். மருத்துவமனைக்கு வரும் போது இந்த அட்டையை எடுத்து வரவேண்டும். இந்த எச்.எம்.ஐ.எஸ். தமிழ்நாடு என்ற செயலியை தங்களது கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து கொண்டால் ஆய்வக முடிவுகளின் அறிக்கைகள், மருந்து சீட்டு மற்றும் மருத்துவ விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

Advertisement

Advertisement

இந்த வசதி தற்போது திருப்பத்தூா் மாவட்டத்தில் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருபவா்கள் தங்களது ஆதாா் அட்டை, அதில் கொடுக்கப்பட்டுள்ள கைப்பேசி எண் ஆகியவற்றை கட்டாயம் எடுத்து வந்து பதிவு செய்து கொண்டால் வசதியாக இருக்கும்.

திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கவும், கூடுதல் மருத்துவா் மற்றும் செவிலியா்கள் நியமிக்கவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினாா்.

அப்போது மருத்துவ அலுவலா் டாக்டா் சிவக்குமாா், டாக்டா்கள், தலைமை செவிலியா் ஆகியோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments