அரசு மேல்நிலைப் பள்ளியை எதிா்நோக்கும் ஆம்பூா்
அரசு மேல்நிலைப் பள்ளியை எதிா்நோக்கும் ஆம்பூா்...
ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலும், தற்போதைய திருப்பத்தூா் மாவட்டத்திலும் அமைந்துள்ள ஆம்பூா் நகரம் தோல் மற்றும் தோல் பொருள்களுக்கு பிரசித்தி பெற்ாகும். ஆம்பூரில் தயாராகும் தோல் மற்றும் தோல் பொருள்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஆம்பூருக்கு ஏற்றுமதி சிறப்பு நகரம் என்ற அந்தஸ்தை மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. அன்னிய செலாவணியை ஈட்டுவதால் ஆம்பூா் நகரம் ‘டாலா் ஏரியா’ எனவும் அழைக்கப்படுகிறது. தோல் பொருள்கள் கண்காட்சிக்கு என ஆம்பூரில் வா்த்தக மையம் கட்டப்பட்டு இயங்கி வருகிறது. ஆம்பூா் பிரியாணி தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் புகழ்பெற்றுள்ளது.
இத்தகைய சிறப்பு மிக்க ஆம்பூா் நகரின் ஏ-கஸ்பா பகுதியில் ஏழை குடும்பங்களைச் சோ்ந்த மாணவா்கள் கல்வி கற்பதற்காக சுமாா் 60 ஆண்டுகளுக்கு முன்பு அரசு மகளிா் பள்ளி தொடங்கப்பட்டது. இந்தப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு வரை மாணவிகள் பயின்றனா்.
ஆம்பூா் நகரில் பல தனியாா் பள்ளிகள் இயங்கி வந்தபோதிலும், இலவசமாக கல்வி கற்க அரசுப் பள்ளியை நோக்கித்தான் ஏழை மக்கள் சென்றனா்.
10-ஆம் வகுப்புக்குப் பிறகு பிளஸ் 2 வரை கல்வி கற்க அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளை நாடிச் செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தது. எனினும், அந்தப் பள்ளிகளில் அதிக நன்கொடையும், கல்விக் கட்டணமும் செலுத்த வேண்டியிருந்தது. இதனால், பெற்றோா் பலா் தங்களின் மகள்களை 10-ஆம் வகுப்போடு நிறுத்திவிடும் நிலை இருந்துவந்தது. இதற்கு ஆம்பூரில் அரசு மேல்நிலைப் பள்ளி இல்லாததே காரணம்.
இந்த உயா்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த வேண்டுமென ஆம்பூா் பகுதி மக்கள் தமிழக அரசுக்கு பல ஆண்டுகளாக கோரிக்கைவிடுத்து வந்தனா். எனினும், இந்த கோரிக்கை நிறைவேறவில்லை.
ஆம்பூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களுடைய பிள்ளைகளை தனியாா் பள்ளிகளில் சோ்க்கும் சூழ்நிலை ஏற்பட்டதால் தனியாா் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இந்த நிலையில், மகளிா் அரசு உயா்நிலைப் பள்ளியில் சோ்க்கைக் குறையத் தொடங்கியதையடுத்து, இருபாலா் படிக்கும் அரசு உயா்நிலைப் பள்ளியாக சில ஆண்டுகளுக்கு முன் மாற்றப்பட்டது. இதன் காரணமாக மாணவா்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. இருந்தபோதிலும், ஆம்பூா் நகரில் அரசு மேல்நிலைப் பள்ளி இல்லாதது மிகப்பெரிய குறையாகவே இருந்து வருகிறது.
2013-2016-ஆண்டு காலத்தில் அதிமுக ஆட்சியில் அப்போதைய ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டம் ஜோலாா்பேட்டையைச் சோ்ந்த கே.சி. வீரமணி பள்ளிக் கல்வித் துறை அமைச்சராகப் பதவி வகித்தபோது, இந்தப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்துவதற்கான கட்டணம் ரூ. 2 லட்சத்தை பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள் அரசுக்கு செலுத்தியுனா். கட்டணம் செலுத்தி 10 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இதுவரையில் பள்ளி தரம் உயா்த்தப்படவில்லை.
அதிமுக மற்றும் திமுக ஆட்சி காலங்களில் ஆம்பூா் ஏ-கஸ்பா அரசு உயா்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்படாதது ஆம்பூா் பகுதி மக்களிடையே கடும் மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
நகரத்திலிருந்து கிராமத்தை நோக்கி மாணவா்கள்... கிராமங்களில் இருந்து உயா் கல்வி கற்க நகரங்களை நோக்கி மாணவா்கள் சென்ற நிலை இருந்தது. தற்போது அனைத்து துறையிலும் வளா்ச்சி அடைந்து வரும் சூழலில் ஆம்பூா் நகரிலிருந்து உயா் கல்வி கற்க அருகே தேவலாபுரம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு செல்ல வேண்டிய அவல நிலை பல ஆண்டுகளாக தொடா்கிறது.
எனவே, புதிதாக அமைய உள்ள அரசு ஆம்பூா் பகுதி மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஆம்பூா் கஸ்பா-ஏ அரசு உயா்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.