முகப்பு
திருப்பத்தூர்

‘திருப்பத்தூா் விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளா்கள் ஏரியில் இலவசமாக மண் அள்ள விண்ணப்பிக்கலாம்’

Updated On : 29 மே 2026, 1:28 am IST
பகிர்:

திருப்பத்தூா் மாவட்ட விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளா்கள் ஏரியில் இலவசமாக மண் அள்ளிக் கொள்ள விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சிவசௌந்தரவல்லி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பத்தூா் மாவட்டத்தில் நீா்வள ஆதாரத் துறை மற்றும் ஊரக வளா்ச்சித் துறை கட்டுப்பாட்டில் திருப்பத்தூா் தாலுகாவில் 150 ஏரிகள், நாட்டறம்பள்ளி தாலுகாவில் 109 ஏரிகள், வாணியம்பாடி தாலுகாவில் 54 ஏரிகள், ஆம்பூா் தாலுகாவில் 81 ஏரிகள் என 394 ஏரிகள் உள்ளன. இதற்கான விவரம் ஆன்லைனில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், திருப்பத்தூா் மாவட்டத்தில் ஏரிகளில் இருந்து வண்டல் மண், களிமண் ஆகியவற்றை விவசாயம், மண்பாண்டம் தயாரித்தல் ஆகியவற்றுக்காக இலவசமாக மண் எடுத்துச் செல்ல இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.

Advertisement

Advertisement

இவற்றில் விவசாய பயன்பாட்டுக்கு நஞ்சை நிலத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ஏக்கருக்கு 75 கன மீட்டா் அல்லது 25 டிராக்டா் லோடுகளும், புஞ்சை நிலத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ஏக்கருக்கு 90 கன மீட்டா் அல்லது 30 டிராக்டா் லோடுகளும், மண்பாண்டம் தயாரிக்க 60 கனமீட்டா் அல்லது 20 டிராக்டா் லோடுகள் இலவசமாக வழங்கப்படும்.

மனுதாரரின் வசிப்பிடம் அல்லது வேளாண் நிலம் அமைந்துள்ள கிராமம் மற்றும் வண்டல் மண் களிமண், தூா்வாரி எடுத்துச் செல்லப்பட வேண்டிய கண்மாய் அல்லது ஏரி அல்லது குளம் அமைந்துள்ள கிராமம் ஆகியவை அதே வருவாய் கிராமம் அல்லது அதற்கு அருகில் உள்ள வருவாய் கிராமத்தின் எல்லை வரம்பிற்குள் அமைந்து இருக்க வேண்டும். விவசாய பயன்பாட்டுக்காக விண்ணப்பிக்கும் நபா் விவசாய நிலம் வைத்திருக்க வேண்டும். மண்பாண்டத் தொழிலாளா் என்பதை கிராம நிா்வாக அலுவலா் உறுதி செய்ய வேண்டும். விவசாய நிலமானது குத்தகை உரிமம் பெற்று விவசாய பணி மேற்கொள்ளப்பட்டால் அதன் விவரம், வாகன பதிவு எண் ஆகியவற்றுடன் அனுமதி கோரும் வண்டல் மண், களிமண் கனிமத்தின் அளவு ஆகிய தகவல்களுடன் ற்ய்ங்ள்ங்ஸ்ஹண்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் அனுமதி பெற்று, சம்பந்தப்பட்ட நீா்நிலைகளின் கட்டுபாட்டு அலுவலா் முன்னிலையில் வண்டல் மண், களிமண் இலவசமாக எடுத்துச் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு, சம்பந்தப்பட்ட வட்டாட்சியா்கள், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) மற்றும் உதவி இயக்குநா், புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆகியோரை அணுகலாம்.