காதலுக்காக தாயைக் கொன்ற மகள் வழக்கு: மேலும் ஒரு இளைஞர் கைது
திருவள்ளூர் அருகே காதலுக்காக தாயை மகள் கொலை செய்த சம்பவத்தில் மேலும் ஒரு இளைஞர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் அருகே காதலுக்காக தாயை மகள் கொலை செய்த சம்பவத்தில் மேலும் ஒரு இளைஞர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸார் கூறியது:
திருவள்ளூரை அடுத்த காக்களூர் ஊராட்சிக்கு உள்பட்ட ஆஞ்சநேயபுரம் பகுதியைச் சேர்ந்த திருமுருகன் -பானுமதி தம்பதியின் மகள் தேவிபிரியா (18). இவர், பட்டாபிராமில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். கல்லூரிக்கு நாள்தோறும் மின்சார ரயிலில் செல்லும்போது, சித்தூரைச் சேர்ந்த சுரேஷுடன் தேவிபிரியாவுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இக்காதல் விவகாரம் தேவிபிரியாவின் தாயார் பானுமதிக்கு தெரியவந்ததையடுத்து, அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் அவர்களுக்கிடையே பிரச்னை ஏற்பட்டது. இதுகுறித்து தேவிபிரியா சுரேஷிடம் கூறியுள்ளார்.
இந்நிலையில், முகநூல் மூலம் விவேக் என்பவர் அறிமுகமானார். அவரிடம் காதல் விவகாரம் குறித்து சுரேஷ் தெரிவித்துள்ளார். இதையடுத்து, தஞ்சாவூரைச் சேர்ந்த அஜித்குமார், கும்பகோணத்தைச் சேர்ந்த விக்னேஷ் ஆகியோரை அனுப்பி காதலுக்கு உதவுவதாக விவேக் கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து, அவர்கள் பானுமதியின் வீட்டில் கொள்ளை நாடகம் நடத்தி, அவரைக் கொலை செய்ய முடிவு செய்தனர். அதன்படி, திங்கள்கிழமை காலை ரயில் மூலம் அஜித்குமாரும், விக்னேஷும் புட்லூர் வந்தனர்.
அன்று மதியம் வீட்டில் தேவிபிரியாவுடன் அவரது தாயார் பானுமதி, சகோதரி சாமுண்டீஸ்வரி ஆகியோர் இருந்தனர். பானுமதி உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அஜித்குமார், விக்னேஷ் ஆகிய இருவரையும் வீட்டுக்குள் வரவழைத்து நகை, பணத்தை கொள்ளையடிப்பது போல் நாடகமாக தேவிபிரியா கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து வீட்டில் திருடன் நுழைந்து விட்டதாக தேவிபிரியா கூச்சலிட்டுள்ளார்.
அப்போது பானுமதி எழுந்து வந்தபோது, அவரை அஜித்குமாரும், விக்னேஷும் பிடித்துக் கொண்டுள்ளனர். அப்போது தேவிபிரியா தனது தாயை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். அப்போது பானுமதியின் அலறல் சப்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். அதையடுத்து, மூவரும் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். அப்போது அவர்கள் மூவரையும் பொதுமக்கள் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர். இதற்கிடையில், பானுமதி ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். அதையடுத்து, பொதுமக்கள் ஒப்படைத்த மூவரும் கைது செய்யப்பட்டனர். தேவிபிரியாவிடம் நடத்திய விசாரணையில், சம்பவம் குறித்த தகவல் தெரியவந்தது என்றனர் போலீஸார்.
காதலர் சுரேஷ் கைது: கொலைச்சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட தேவிபிரியாவின் காதலர் சுரேஷை திருவள்ளூர் துணைக் கண்காணிப்பாளர் கங்காதரன் தலைமையிலான தனிப்படை போலீஸார் திங்கள்கிழமை இரவு ஆந்திர மாநிலம், சித்தூரை அடுத்த தடா பகுதியில் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து, அவர் திருவள்ளூர் கிராமிய காவல் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை அழைத்து வரப்பட்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.