முகப்பு
திருவள்ளூர்

பஞ்சமி நிலத்தை மீட்கக் கோரி நிலத்தில் கம்பு விதைத்து ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி அருகே, பஞ்சமி நிலத்தை மீட்கக் கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் நிலத்தில் கம்பு விதைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Updated On : 24 ஜூலை 2018, 3:15 am IST
பகிர்:

கும்மிடிப்பூண்டி அருகே, பஞ்சமி நிலத்தை மீட்கக் கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் நிலத்தில் கம்பு விதைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு தலித் மக்களிடம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் முயற்சி செய்து வருகின்றனர். 
இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்கள் அடிப்படையில், கும்மிடிப்பூண்டி வட்டம், செதில்பாக்கத்தில் 32 ஏக்கர் அளவிற்கு பஞ்சமி நிலம் உள்ளது என்பதை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர்கள் செதில்பாக்கம் கிராமத்திற்குச் சென்று விசாரித்த போது பஞ்சமி நிலம் இருப்பது உறுதியானது. ஆனால், அந்த நிலத்தை ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமித்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, பஞ்சமி நிலத்தை ஆக்கிமிப்பாளர்களிடமிருந்து மீட்டு, அதே கிராமத்தில் உள்ள 192 தலித் மக்களுக்கு பிரித்துக் கொடுக்க வேண்டும் என கும்மிடிப்பூண்டி வட்டாட்சியரிடம் கடந்த 2016 செப்டம்பர் 9-இல் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. மேலும், பொன்னேரி கோட்டாட்சியர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடமும் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.
மேற்கண்ட அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-இல், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம், ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் செதில்பாக்கம் கிராம மக்களுடன் இணைந்து தீண்டாமை ஒழிப்பு முன்ணனியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் எஸ். கே.மகேந்திரன் தலைமையில் நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த பொன்னேரி கோட்டாட்சியர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அடுத்த 90-நாள்களில் தனியார் வசம் உள்ள பஞ்சமி நிலத்தை மீட்டு அந்த கிராமத்தில் வசிக்கும் தலித் மக்களுக்குப் பிரித்து வழங்கப்படும் என எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தார்.
ஆனால், பஞ்சமி நிலத்தை மீட்க அதிகாரிகள் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.மேலும் காலதாமதம் செய்வதோடு நிலத்தை ஆக்கிரமித்தவர்களுக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். 
இந்நிலையில், நமக்கான நிலத்தை நாமே மீட்போம் என்ற முழக்கத்தோடு, தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர், மாதர் சங்கத்தினர், வாலிபர் சங்கத்தினர், விடுதலைச் சிறுத்தை கட்சியினர், செதில்பாக்கம் கிராம மக்கள் ஆகியோர் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் கம்பு விதைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் எஸ். கே.மகேந்திரன் தலைமை வகித்தார். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ். கண்ணன், ப.சுந்தரராசன், மாவட்டச் செயலாளர் எஸ். கோபால், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.செல்வராஜ், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் ப.பாரதி அண்ணா, மாவட்டத் தலைவர் ஏ.ஜி.கண்ணன், சிஐடியூ மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.துளசி நாராயணன், ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் இ.மோகனா, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அ.து.கோதண்டன்,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் என். கங்காதரன், தமிழ்நாடு நில உரிமைக் கூட்டமைப்பின் காஞ்சி மாவட்ட அமைப்பாளர் தேவ.ருக்மாங்கதன், செதில்பாக்கம் மகளிர் குழுத் தலைவர் சரசா உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
தகவல் அறிந்து வந்த பொன்னேரி கோட்டாட்சியர் முத்துசாமி, கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் மதன் குப்புராஜ் , துணை வட்டாட்சியர் தாமோதரன், ஆரம்பாக்கம் காவல் ஆய்வாளர் த.கி.குமரன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 
அப்போது, வரும் ஆகஸ்ட் 7, 8-ஆகிய இரண்டு நாள்களில் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் இது குறித்து உரிய விசாரணை நடைபெறும். அப்போது கிராம மக்கள் பஞ்சமி நிலம் குறித்த ஆவணங்களைக் கொண்டு வந்து சமர்ப்பிக்கலாம். அதன் பிறகு சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இதைத்தொடர்ந்து, அனைவரும் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments