ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் சாலை மறியல்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்டத்தில் புதன்கிழமை மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோஅமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்டத்தில் புதன்கிழமை மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோஅமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துதல், ஊதிய முரண்பாடுகளைக் களைதல், சிறப்பு ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கத்தினர் இணைந்த கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோவினர் செவ்வாய்க்கிழமை முதல் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் அடிப்படையில், 2-ஆம் நாளாக திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் புதன்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். இதில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அதைத் தொடர்ந்து, ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சென்னை-திருப்பதி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், ஜாக்டோ-ஜியோவைச் சேர்ந்த 360 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
கும்மிடிப்பூண்டியில்...
கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோவினர், தொடர்ந்து புதன்கிழமை வட்டாட்சியர் அலுவலகம் முன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியல் ஆர்ப்பாட்டத்தில், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.
இதைத் தொடர்ந்து, அங்கு வந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸார் மறியலில் ஈடுபட்ட 182 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
திருத்தணியில்...
திருத்தணி கமலா திரையரங்கம் அருகில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் திருவள்ளூர் மாவட்ட அரசு ஊழியர் சங்கச் செயலர் காந்திமதிநாதன், தலைவர் பூங்கோதை ஆகியோர் தலைமையில், ஆர்ப்பாட்டத்தில் 150 பெண்கள் உள்பட மொத்தம் 400 பேர் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
அப்போது, திருத்தணி காவல் துணைக் கண்காணிப்பாளர் சேகர் மற்றும் போலீஸார் அவர்களைக் கைது செய்து, தனியார் மண்டபத்தில் அடைத்தனர். திருத்தணி பகுதியில் பெரும்பாலான தொடக்கப் பள்ளிகள் புதன்கிழமை பூட்டிக் கிடந்தன.
மாதவரத்தில்...
சென்னை, மாதவரம் நகராட்சி அலுவலகம் எதிரில் ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக்குழு உறுப்பினர் ரமேஷ் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது.
மறியலில் ஈடுபட்ட 400 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பொன்னேரியில்...
அதேபோல், பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் அருகே மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான அனைவரையும் போலீஸார் மாலையில்
விடுவித்தனர்.