26-இல் ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடத்த உத்தரவு
குடியரசு தினவிழாவை முன்னிட்டு ஜன. 26-இல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளிலும் பொதுமக்கள் பங்கேற்புடன் கிராம சபைக் கூட்டங்கள் நடத்த
குடியரசு தினவிழாவை முன்னிட்டு ஜன. 26-இல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளிலும் பொதுமக்கள் பங்கேற்புடன் கிராம சபைக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: குடியரசு தினவிழா ஜன. 26-ஆம் தேதி நாடெங்கிலும் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி ஒவ்வொரு ஊராட்சியிலும் கிராமசபைக் கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் 14 ஊராட்சிகளில் உள்ள 526 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரையும் பங்கேற்கச் செய்வதோடு, அனைத்து ஊராட்சி ஒன்றியத் தனி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர்களும் இதில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
இதில் கிராம ஊராட்சி நிர்வாகத்தினர், பொது நிதி செலவினம், திட்ட அறிக்கை ஆகியவற்றை தயார் செய்து வைக்க வேண்டும்.
அதேபோல், குடிநீர் சிக்கனமாகப் பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், பல்வேறு திட்டப் பணிகளின் நிலை மற்றும் நிதி செலவின விவரங்கள் குறித்து விவாதித்தலும், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம், பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தியை தடை செய்தல், சுகாதார உறுதி மொழி ஏற்றல் ஆகியவை குறித்து எடுத்துரைக்க வேண்டும். மேலும், கிராமங்களில் திறந்த வெளியில் மலம் கழித்தலைத் தவிர்க்கும் வகையில், தனிநபர் சுகாதார வளாகங்களைக் கட்டி பயன்படுத்துவோரை பாராட்ட வேண்டும்.
அத்துடன், கிராமங்களில் தனிநபர் கழிப்பறைகள் இல்லாத குடியிருப்பு விவரங்களை சேகரிக்க வேண்டும்.
மாணவர்கள் பள்ளிக்கூட கழிப்பறைகள், அங்கன்வாடி மையக் கழிப்பறைகளை பயன்படுத்த வலியுறுத்த வேண்டும்.
இக்கூட்டத்தில், பொதுமக்கள் திட்டமிடல் இயக்கம் குறித்தும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.
அதனால் பொதுமக்கள் அனைவரும் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.