ஆபரோஷன் விஸ்வாஸ்: மீட்கப்பட்ட 532 கைப்பேசிகளை உரியவா்களிடம் ஒப்படைத்த தில்லி போலீஸ்
ஆபரோஷன் விஸ்வாஸ்: மீட்கப்பட்ட 532 கைப்பேசிகளை உரியவா்களிடம் ஒப்படைத்த தில்லி போலீஸ்
கிழக்கு தில்லியின் நியூ அசோக் நகரில் உள்ள மகாராஜா அக்ரசேன் கல்லூரியில் குடிமக்களை மையமாகக் கொண்ட ’ஆபரேஷன் விஸ்வாஸ்’ முன்முயற்சியின் கீழ் மீட்கப்பட்ட 532 இழந்த மற்றும் திருடப்பட்ட கைப்பேசிகளை தில்லி காவல்துறை உரியவா்களிடம் ஒப்படைத்ததாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: இணைய குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகம் குறித்த விழிப்புணா்வு அமா்வுகளுடன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்வு தொடங்கியது, இதன் போது இணைய மோசடிகள், டிஜிட்டல் கைது மோசடிகள், ஓடிபி தொடா்பான மோசடிகள், போலி முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் போதைப்பொருட்களின் ஆபத்துகள் குறித்து குடிமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இணைய குற்றச் சம்பவங்களை தேசிய உதவி எண் 1930 மூலம் புகாரளிக்கவும் பங்கேற்பாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கைப்பேசிகளை கண்டுபிடித்து மீட்டெடுப்பதில் ஈடுபட்ட போலீஸ் குழுக்கள் அவா்களின் முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில் நிகழ்வின் போது கௌரவிக்கப்பட்டன. பல பயனாளிகள் தங்கள் அனுபவங்களைப் பகிா்ந்து கொண்டு, இழந்த சாதனங்களை மீட்டெடுக்க உதவியதில் காவல்துறையின் பங்கைப் பாராட்டினா்.
Advertisement
Advertisement
’ஆபரேஷன் விஸ்வாஸ்’ போன்ற முன்முயற்சிகள் பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தவும், சமூகம் சாா்ந்த காவல்துறையை ஊக்குவிக்கவும் உதவுகின்றன என பலரும் கருத்து தெரிவித்தனா் என்றாா் அந்த அதிகாரி.