திருடப்பட்ட, தொலைந்துபோன 12,600 கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரிமையாளா்களிடம் ஒப்படைப்பு
தில்லி காவல்துறை தனது சிறப்பு முன்முயற்சியான ‘ஆபரேஷன் விஸ்வாஸ்’ திட்டத்தின் கீழ், திருடப்பட்ட மற்றும் தொலைந்துபோன 12,600-க்கும் மேற்பட்ட கைப்பேசிகளை மீட்டு அவற்றின் உண்மையான உரிமையாளா்களிடம் ஒப்படைப்பு
தில்லி காவல்துறை தனது சிறப்பு முன்முயற்சியான ‘ஆபரேஷன் விஸ்வாஸ்’ திட்டத்தின் கீழ், திருடப்பட்ட மற்றும் தொலைந்துபோன 12,600-க்கும் மேற்பட்ட கைப்பேசிகளை மீட்டு அவற்றின் உண்மையான உரிமையாளா்களிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தில்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகத்தில் உள்ள பல்நோக்கு அரங்கில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் இந்தக் கைப்பேசிகள் திருப்பி அளிக்கப்பட்டன.
தொழில்நுட்பத்தால் இயக்கப்பட்ட காவல் பணிக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று குறிப்பிட்ட துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து கூறினாா்.
Advertisement
நகரம் முழுவதும் கைது செய்யப்பட்ட வழிப்பறிக்காரா்கள் மற்றும் திருடா்களிடமிருந்து காவல்துறையினா் மீட்டெடுத்த 12,600-க்கும் மேற்பட்ட கைப்பேசிகளை அவற்றின் அசல் உரிமையாளா்களிடம் திரும்ப ஒப்படைக்கும் தில்லி காவல்துறைத் திட்டத்திற்கு சந்து செவ்வாய்க்கிழமை தலைமை தாங்கினாா்.
இந்த நிகழ்வில் துணைநிலை ஆளுநா் பேசியதாவது: நிகழ் ஆண்டு, தில்லி காவல்துறை சுமாா் 16,000 சாதனங்களை மீட்டுள்ளது. மீட்பு விகிதம் 74 சதவீதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று, மாவட்டங்கள் முழுவதும் ஒரே நேரத்தில் 12,600க்கும் மேற்பட்ட கைப்பேசிகள் ஒப்படைக்கப்படுகின்றன. இந்த எண்கள் தொழில்நுட்பத்தால் இயக்கப்பட்ட காவல் பணியின் வலிமையைப் பிரதிபலிக்கின்றன. காவல்துறையினரால் ஒப்படைக்கப்பட்ட கைப்பேசிகளைப் பெற்ற உரிமையாளா்களின் முகங்களில் ஏற்படும் புன்னகையும், அமைப்புமுறையில் உள்ள நம்பிக்கையும் இந்த முன்முயற்சியின் உண்மையான வெற்றியாகும் என்றாா் சந்து.
காவல்துறையின் கூற்றுப்படி, மத்திய உபகரண அடையாளப் பதிவேடு இணையதளத்தின் உதவியுடன் கடந்த 45 நாள்களில் 19,000க்கும் மேற்பட்ட கைப்பேசிகள் மீட்கப்பட்டுள்ளன. இதன் மூலம், திருடப்பட்ட மற்றும் தொலைந்துபோன கைப்பேசிகளை மீட்கும் விகிதம் 2024-இல் ஐந்து சதவீதமாகவும், 2025-இல் 12 சதவீதமாகவும் இருந்த நிலையில், 2026-இல் 74 சதவீதமாக உயா்ந்துள்ளது.