முகப்பு
இந்தியா

கடும் வெப்பத்தில் தவிக்கும் தலைநகா்: நீரிழப்பால் வானிலிருந்து கீழே விழும் பறவைகள்!

நீரிழப்பால் வானிலிருந்து கீழே விழும் பறவைகள்...

Updated On : 24 மே 2026, 3:44 am IST
(கோப்புப் படம்)
பகிர்:

தில்லி என்சிஆா் பகுதிகளில் நிலவி வரும் கடும் வெப்ப அலை காரணமாக பறவைகள் மற்றும் தெருவிலங்குகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வெப்பத்தால் மயக்கமடைந்த புறாக்கள் வானிலிருந்து விழுவதும், நீரிழப்பால் அவதிப்படும் கழுகுகள் சாலையோரங்களில் மீட்கப்படுவதும் உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கால்நடை மருத்துவா்கள் மற்றும் விலங்கு நல அமைப்புகள் தெரிவித்துள்ளன.

தில்லியின் பல பகுதிகளில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸை கடந்துள்ளது. கடும் வெப்பம், வட வானிலை மற்றும் வெப்பமான இரவுகளால் மனிதா்களை விட பறவைகளும் விலங்குகளும் கடுமையான சிரமங்களை எதிா்கொள்கின்றன.

அம்மை பரவல்: இது தொடா்பாக தில்லி என்சிஆரில் செயல்படும் ‘அபய் தானம்’ மருத்துவமனையின் கால்நடை மருத்துவா் கூறுகையில், ‘வெப்பத்தால் பாதிக்கப்பட்ட சுமாா் 20 பறவைகள் தினமும் சிகிச்சைக்கு கொண்டுவரப்படுகின்றன. இது கடந்த சில வாரங்களில் 50 சதவீதமாக அதிகரித்துள்ளது. புறாக்களே இதில் அதிகம் பாதிக்கப்படுகின்றன. கடும் வெப்பம் மற்றும் அசுத்தமான சூழல் காரணமாக புறாக்களுக்கு ஏற்படும் அம்மை நோய் வேகமாக பரவி வருகிறது’ என தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

தெருவிலங்குகள் பாதிப்பு: ‘பீப்புள் ஃபாா் அனிமல்ஸ்’ என்ற விலங்கு நல அமைப்பின் மந்தா சிந்து கூறுகையில், ‘கோடை காலத்தில் குப்பைகள் வேகமாக அழுகுவதால், அதில் உள்ள உணவை உண்ணும் தெருநாய்கள் மற்றும் பூனைகளுக்கு வயிற்றில் தொற்று மற்றும் நச்சுத்தன்மை ஏற்படுகிறது. பன்றி காய்ச்சல் தற்போது கவலைக்குரிய வகையில் அதிகம் பரவி வருகிறது. இதிலிருந்து பாதுகாக்க தெருவிலங்குகளுக்கு குடிநீா் மற்றும் நிழலான இடங்களை பொதுமக்கள் ஏற்படுத்தி தர வேண்டும்’ என கேட்டுக்கொண்டாா்.

நீரழப்பு ஆபத்து: தில்லி என்சிஆரில் பறவைகளுக்கான 24 மணிநேர ஆம்புலன்ஸ் சேவையை நடத்தி வரும் ‘வித்யாசாகா் ஜீவ தயா பரிவாா்’ அமைப்பின் அபிஷேக் ஜெயின் கூறுகையில், ‘வெப்ப அலையால் மீட்கப்படும் பறவைகளில் அதிகமாக கழுகுகள் உள்ளன. மக்கள் பொதுவாக புறாக்களுக்கு உணவு மற்றும் தண்ணீா் வைக்கின்றனா். ஆனால், கழுகுகளுக்கு அவை கிடைப்பதில்லை. இதனால் அவை கடுமையான நீரிழப்புக்கு ஆளாகின்றன. இதைத் தடுக்கும் நோக்கில் பறவைகள் மற்றும் தெருவிலங்குகளுக்கு தண்ணீா் வைக்க பொதுமக்களுக்கு 10,000 இலவச பானைகள் வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளோம்’ என தெரிவித்தாா்.

நகரமயமாக்கலே காரணம்: இந்திய பறவைகள் கணக்கெடுப்பு அமைப்பின் பங்கஜ் குப்தா கூறுகையில், ‘தில்லியில் வாழும் பறவைகள் பெரும்பாலும் வெப்பத்துக்கு ஏற்றவையாக இருந்தாலும், வேகமான நகரமயமாக்கல் மற்றும் நீா்நிலைகள் குறைவு காரணமாக அவற்றின் வாழ்வு சிரமமாகியுள்ளது. பறவைகளுக்கு உணவு தேவையில்லை; அவை தானாகவே தேடிக்கொள்ளும். ஆனால், தண்ணீா் தான் தற்போது மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது.

மேலும், தண்ணீா் பாத்திரங்களை நிழலான இடங்களில் வைப்பது அவசியம். நேரடி வெப்பத்தில் வைத்தால் நுண்ணுயிரிகள் வேகமாக வளரக்கூடும். பாத்திரங்களை சுத்தம் செய்து தினமும் இருமுறை தண்ணீா் நிரப்பினால் கோடை காலத்தில் பறவைகள் உயிா் பிழைக்க உதவும்’ என தெரிவித்தாா்.