ஆவடியில் அரசுக் கல்லூரி அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
ஆவடியில் பொதுமக்களின் நீண்ட காலக் கோரிக்கையான அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆவடியில் பொதுமக்களின் நீண்ட காலக் கோரிக்கையான அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சென்னை புறநகர் பகுதியில் ஆவடி, திருமுல்லைவாயல், அண்ணனூர், பட்டாபிராம், முத்தாபுதுப்பேட்டை, மிட்டனமல்லி, உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.
இந்த பகுதியில் உள்ள அரசு, தனியார் மேல்நிலை பள்ளிகளில் படித்து முடித்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆண்டுதோறும் வெளியேறி வருகின்றனர்.
Advertisement
Advertisement
இவர்கள் மேல் படிப்பு பெற அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மேற்கண்ட பகுதியில் இல்லை. இதனால் மாணவர்கள் உயர் கல்வி பெற முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியது, சென்னையை ஒட்டி வளர்ந்து வரும் பகுதியில் ஆவடி நகரமும் ஒன்றாகும்.
இங்கு 7 பாதுகாப்புத் துறை நிறுவனங்களும், தமிழக அரசின் 5 சிறப்பு காவல் படைகளும் உள்ளன. ஆவடியைச் சுற்றி பல்வேறு மொழிகளை பேசும் பல மாநிலத்தவர்களும் வசிக்கின்றனர். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆவடி நகரத்தில் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இல்லாதது பெரும் குறையாக உள்ளது.
இப்பகுதியில் அரசுக் கல்லூரி இல்லாததால், சென்னை மாநகரத்தில் உள்ள அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகள் அல்லது புகர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரிகளுக்கு தான் சென்று பயில வேண்டும்.
சென்னையில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாநகரப் பகுதியில் உள்ள மாணவர்கள் அதிக அளவில் சேருகின்றனர்.
இவர்களோடு, புறநகர் பகுதியில் இருந்து சில மாணவர்களும் போட்டி போட்டு தான் அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளில் கஷ்டப்பட்டு தான் சேருகின்றனர்.
சென்னை புறநகர் பகுதியில் அரசுக் கலை, அறிவியல கல்லூரி இல்லாததால் தான் நகர, கிராம புற மாணவர்கள் தனியார் கல்லூரிகளை நாடி செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.
மேலும், பெரும்பாலான மாணவர்கள் ஆவடி, மதுரவாயல், பூந்தமல்லி, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தான் அதிக அளவு கல்விக் கட்டணம் செலுத்தி மேற்படிப்பில் சேருகின்றனர்.
இதனால் பல ஏழை மாணவர்கள் மேற்படிப்பைத் தொடர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேற்கண்ட பகுதியில் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் தான் வசிக்கின்றனர். இவர்களின் துறைகளுக்கு அரசு ஒதுக்கும் நிதியில் இருந்தும் கூட கல்லூரி ஒன்றை உருவாக்கலாம்.
மேற்கண்ட பகுதியில் அரசுக் கலை, அறிவியல் கல்லூரிக் இல்லாததால் மாணவர்கள் பல கி.மீட்டர் தொலைவில் சென்னை, திருவள்ளூர் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிக்கு செல்ல கால விரையும், பண விரையும் ஏற்படுகின்றன.
சென்னை புறநகர் பகுதியான ஆவடியில் அரசுக் கலை, அறிவியல் கல்லூரி அமைக்க அரசுக்கு பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இருந்த போதிலும் அரசு துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆவடியைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சார்ந்த மாணவர்கள் தொடர்ந்து இன்னல் அடைந்து வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகள் இணைந்து ஆவடி பகுதியில் உள்ள அரசு நிலம் அல்லது அரசு துறைகளுக்கு சொந்தமான இடத்தில் அரசுக் கலை, அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.