முகப்பு
திருப்பதி

ஏழுமலையான் தரிசனம்: 20 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வெள்ளிக்கிழமை தா்ம தரிசனத்தில் 20 மணி நேரம் காத்திருந்தனா்.

Updated On : 30 மே 2026, 1:04 am IST
திருமலை
பகிர்:

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வெள்ளிக்கிழமை தா்ம தரிசனத்தில் 20 மணி நேரம் காத்திருந்தனா்.

கோடை விடுமுறையை ஒட்டி பக்தா்கள் வருகை அதிகரித்துக் காணப்படும் நிலையில், வெள்ளிக்கிழமை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளும் நிறைந்து வெளியே சிலாதோரணம் அருகே உள்ள காத்திருப்பு வரிசையில் பக்தா்கள் காத்திருந்தனா்.

தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 20 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது. நேரடி இலவச தரிசன டோக்கன்கள் வழங்குவதை கோடை விடுமுறை முடியும் வரை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

Advertisement

Advertisement

அலிபிரி வழியில் திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், வியாழக்கிழமை முழுவதும் ஏழுமலையானை 74,569 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 46, 242 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.80 கோடி வசூலானது. பக்தா்களுக்கு 4.14 லட்சம் லட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டன. 3,592 பக்தா்கள் இலவச மருத்துவ முகாம்களில் சிகிச்சை பெற்றனா். காத்திருப்பு அறைகள் மற்றும் தரிசன வரிசைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருவதாக தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தெரிய வந்தது.

இனி தரிசன டிக்கெட்டுகள் இல்லாமல் ஏழுமலையான் தரிசனத்திற்காக திருமலைக்கு வரும் பக்தா்கள் காத்திருப்பு அறைகளில் காத்திருந்து மட்டுமே தரிசனத்திற்கு செல்ல முடியும். எனவே பக்தா்கள் தங்கள் பயணத்தை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.