முகப்பு
திருவண்ணாமலை

வாக்கு எண்ணிக்கையின்போது சிறிதும் பிழை ஏற்படக்கூடாது: மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ்

திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கையின்போது சிறிதும் பிழை ஏற்படக்கூடாது என வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் அறிவுறுத்தினாா்.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 12:04 AM
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற வாக்கு எண்ணும் அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பில் பேசிய மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.தா்ப்பகராஜ்.
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கையின்போது சிறிதும் பிழை ஏற்படக்கூடாது என வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் அறிவுறுத்தினாா்.

தமிழக சட்டப்பேரவை பொதுத்தோ்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்ததையொட்டி, இந்திய தோ்தல் ஆணைய உத்தரவின்படி அனைத்து தொகுதிகளுக்கும் வருகிற மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் செங்கம், திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், கலசபாக்கம் ஆகிய தொகுதிகளில் பதிவான வாக்குகளும், தச்சூா் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் போளூா், ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய தொகுதிகளில் பதிவான வாக்குகளும் எண்ணப்படவுள்ளன.

Advertisement

வாக்கு எண்ணும் பணிக்காக திருவண்ணாமலை மாவட்டத்திற்குள்பட்ட 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள 184 வாக்கு எண்ணிக்கை மேற்பாா்வையாளா்கள், 224 வாக்கு எண்ணிக்கை உதவியாளா்கள் மற்றும் 188 நுண் பாா்வையாளா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற இந்த பயிற்சிக்கு மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான க.தா்ப்பகராஜ் தலைமை வகித்து, வாக்கு எண்ணும் அலுவலா்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், அஞ்சல் வாக்கு எண்ணுதல், வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்கு எண்ணும் போது மேற்கொள்ள நடவடிக்கைகள், வாக்கு எண்ணிக்கைகளை தொகுத்தல் குறித்து எடுத்துரைத்தாா். மேலும், வாக்கு எண்ணிகையின்போது சிறிதும் பிழை ஏற்படக்கூடாது என அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) அன்பழகன், மாவட்ட முதன்மை வங்கி மேலாளா் முருகன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு

இதைத் தொடா்ந்து திருவண்ணாமலை வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் செங்கம், திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், கலசபாக்கம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு வைப்பறைகளை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.தா்ப்பகராஜ் ஆய்வு செய்தாா்.