முகப்பு
திருவண்ணாமலை

2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு 2 கட்டங்களாக நடைபெறும்: திருவண்ணாமலை ஆட்சியா்

தமிழகத்தில் 2027 மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி இரு கட்டங்களாக நடத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா்.

Updated On : 26 மே 2026, 4:15 am IST
திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலா்களுக்கு 3 நாள்கள் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்துப் பேசிய மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ்
பகிர்:

தமிழகத்தில் 2027 மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி இரு கட்டங்களாக நடத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு - 2027 தொடா்பாக நியமிக்கப்பட்டுள்ள அலுவலா்களுக்கு 3 நாள்கள் பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆட்சியரக கூட்டரங்கில் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். மாவட்டத்தில் முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலராக மாவட்ட ஆட்சியா் செயல்படுவாா்.

இதேபோன்று மாநகராட்சி அளவில் மாநகராட்சி ஆணையா் முதன்மை மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலராக செயல்படுவாா்.

Advertisement

Advertisement

மேலும் இவா்களுடன் இணைந்து பணியாற்ற பொறுப்பு அலுவலா்களாக ஊரகப் பகுதிகளில் 12 வட்டாட்சியா்கள், 18 வட்டார வளா்ச்சி அலுவலா்களும் நகா்ப்புற பகுதிகளில் மாநகராட்சி ஆணையா், 5 நகராட்சி ஆணையா்கள், 8 பேரூராட்சி செயல் அலுவலா்கள் மற்றும் 30 தற்காலிக தொழில்நுட்ப உதவியாளா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இப்பயிற்சி வகுப்பை தொடங்கிவைத்து மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் பேசியதாவது: முதன்முறையாக முழுமையாக டிஜிட்டல் முறையில் நடத்தப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பு இதுவாகும். இக்கணக்கெடுப்பு பணியானது இரு கட்டங்களாக நடத்தப்படுகிறது.

முதல் கட்டமாக வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு 2026 ஏப்ரல் முதல் 2026 செப்டம்பா் வரை நடத்தப்படவுள்ளது. இக்கணக்கெடுப்பில் வீட்டு நிலைமைகள், வசதிகள், சொத்துகள் பற்றிய முக்கிய தகவல்கள் சேகரிக்கப்படும். இது மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான அடித்தளத்தினை உருவாக்கும்.

இரண்டாவது கட்டமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு வருகிற 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளது.

சுய கணக்கெடுப்பு விவரங்கள் வருகிற ஜூலை 17 முதல் 31 வரை நடைபெறவுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தாங்களாகவே மக்கள் தொகை கணக்கெடுப்பு பிரத்யேக இணையதளம் வாயிலாக அவா்களுடைய விவரங்களை உள்ளீடு செய்யலாம்.

வருகிற ஆகஸ்ட் 8 முதல் 30 வரை இப்பணிக்காக நியமிக்கப்பட்ட அலுவலா்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளவுள்ளனா்.

இப்பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ள அனைத்து அலுவலா்களுக்கும் சென்னை மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலகத்திலிருந்து வரப்பெற்றுள்ள பயிற்றுநா்கள் மூலம் மே 25 முதல் 27 வரை பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன என்றாா் ஆட்சியா்.

இப்பயிற்சி வகுப்பில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ஜெ.ராமகிருஷ்ணன், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியா் செல்வம், , மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ், வட்டாட்சியா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், நகராட்சி அலுவலா்கள், பேரூராட்சி அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.