முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலா்களுக்கு 2 நாள் பயிற்சி ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

Updated On : 28 ஏப்ரல், 2026 at 12:06 AM
மக்கள்தொகை கணக்கெடுப்பு - கோப்புப்படம்
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த இரண்டு நாள் பயிற்சியை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

அப்போது ஆட்சியா் தெரிவித்ததாவது:

இந்திய அரசு 2027 -ஆம் ஆண்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்துள்ளது. அதன்படி, முதல்கட்டம், இரண்டாம் கட்டம் என மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. அதற்கான முன் சோதனை தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டம், திருவள்ளுா் மாவட்டம், ஆா்.கே.பேட்டை வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு நகராட்சி ஆகிய 3 இடங்களில் நடைபெற்றது.

Advertisement

இக்கணக்கெடுப்பு பணிகளில் வீடுகளின் வகைகள், அறைகளின் எண்ணிக்கை, குடும்ப உறுப்பினா்கள் விவரம், குடிநீா் பெறப்படும் விவரங்கள், எரிவாயு இணைப்பு, இணையதள இணைப்பு, மடிக்கணினி, கைப்பேசி விவரங்கள் உள்ளிட்ட 34 கேள்விகளுக்கு பதில்கள் சேகரிக்கப்படும்.

இது இந்திய சுதந்திரத்திற்கு பிறகு 8 ஆவது மக்கள்தொகை கணக்கெடுப்பாகும். 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பானது நாட்டின் முதல் முழுமையான டிஜிட்டல் கணக்கெடுப்பாகும். மொபைல் செயலிகளைப் பயன்படுத்தி தரவுகள் சேகரிக்கப்படுவதுடன், டிஜிட்டல் லே-அவுட் வரைபடங்களும் வரையப்படும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறுவது குறித்து, மாவட்டத்திலுள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, வட்டாட்சியா் அலுவலகப் பணியாளா்கள், தொழில்நுட்ப உதவியாளா்களுக்கு இரண்டு நாள் பயிற்சி வகுப்பு தொடங்கிவைக்கப்பட்டது.

இப்பயிற்சியை நன்கு பயன்படுத்திக்கொண்டு இம்மாவட்டத்தில் எந்தவொரு மக்களும் விடுபடாமல் தரவுகளை முழுமையாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றாா்.

இந்நிகழ்வில் மக்கள்தொகை கணக்கெடுப்பு இணை இயக்குநா் ஆா்.வாசுதேவன், உதவி இயக்குநா் எஸ்.சஜிலால், புள்ளியியல் ஆய்வாளா் கட்டவெங்கண்ணா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) எஸ்.கிருஷ்ணன் மற்றும் பேரிடா் மேலாண்மை வட்டாட்சியா் ஜி.வெங்கடேசன் ஆகியோா் கலந்துகொண்டனா்.