முகப்பு
வேலூர்

"நவபாஷாணத்தை ஆராய்ச்சி செய்தும் நோபல் பரிசு வெல்லலாம்'

இன்றைய இளம் அறிவியலாளர்கள் நவபாஷாணம் மூலிகையை ஆராய்ச்சி செய்தும் நோபல் பரிசை பெறலாம் என சாந்தி ஸ்வரூப் பட்நாகர்

Updated On : 6 ஏப்ரல் 2018, 4:14 am IST
பகிர்:

இன்றைய இளம் அறிவியலாளர்கள் நவபாஷாணம் மூலிகையை ஆராய்ச்சி செய்தும் நோபல் பரிசை பெறலாம் என சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது பெற்ற அறிவியல் ஆராய்ச்சியாளர் டி.ஜெ.பாண்டியன் தெரிவித்தார். 
 திருவலத்தை அடுத்த சேர்க்காட்டில் அமைந்துள்ள வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக அறிவியல் மன்றம் சார்பில், அறிவியல் குறித்த விழிப்புணர்வு  உருவாக்குதல்  என்ற  தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் பல்கலைக்கழக பல்நோக்கு கலையரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. 
 பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) வெ.பெருவழுதி முன்னிலை வகித்தார். விலங்கியல் துறை இணை போராசிரியர் எ.பன்னீர்செல்வம் வரவேற்றார்.
பல்கலைக்கழக துணைவேந்தர் க.முருகன் தலைமை வகித்து, கருத்தரங்கைத் தொடங்கி வைத்துப் பேசினார். 
 கருத்தரங்கில், சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது பெற்ற அறிவியல் ஆராய்ச்சியாளர் டி.ஜெ.பாண்டியன் பங்கேற்றுப் பேசியதாவது: இளம் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் பெரிய, பெரிய ஆய்வுக் கூடங்களில் ஆராய்ச்சி மேற்கொண்டால் தான் உலகின் உயரிய விருதான நோபல் பரிசை வாங்க முடியும் என்ற எண்ணத்தை முதலில் மாற்றிக்கொள்ள வேண்டும். ஏனென்றால் பல்வேறு துறைகளில் நோபல் பரிசு வென்றவர்கள் சிறிய ஆராய்ச்சிக் கூடங்களில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு புதிய கண்டுபிடிப்புகளை கண்டறிந்துள்ளனர். அவற்றில் நோய் எதிர்ப்பு  மருந்து (ஆண்டிபயாடிக்) கண்டுபிடித்த  அலெக்சாண்டர் பிளெமிங்குக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
 ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே  நவபாஷாணம் எனும் மிகச்சிறந்த நோய் எதிர்ப்பு மூலிகை மருந்தைக் கொண்டு, பழனியில் தண்டாயுதபாணி சிலையை தயார் செய்த போகர் சித்தருக்கு தான் முதலில் நோபல் பரிசு வழங்கியிருக்க வேண்டும். இன்றைய இளம் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் நவபாஷாணம் மூலிகையை ஆராய்ச்சி செய்தும் நோபல்  பரிசை  வெல்லலாம். அதேபோல் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் டெங்கு, சிக்குன் குனியா உள்ளிட்ட நோய்க் கிருமிகளை பரப்பும் கொசுக்களை அதன் ஆரம்ப நிலையிலேயே மற்றொரு உயிருக்கு உணவாக்கி அழிக்கும் ஆராய்ச்சியை மேற்கொண்டால் நோபல் பரிசை வெல்வதுடன், பல ஆயிரம் பேருக்கு வேலையும், பல கோடி ரூபாய் வருமானமும் கிடைக்கும் என்றார்.  மேலும்  கொல்கத்தாவில்  போஸ் பவுண்டேஷன்  எனும் அமைப்பு இளம் அறிவியல்  ஆராய்ச்சியாளருக்கு பல்வேறு வகையில் உதவி வருவது போல், தமிழக அரசும், பெரிய செல்வந்தர்களும் அது  போன்ற அமைப்பை உருவாக்கி இளம் அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்குத் தேவையான  உதவிகளை செய்து ஊக்குவித்தால் திருவள்ளுவர் பல்கலைக்கழக இளம் அறிவியல்  ஆராய்ச்சியாளர்கள் நோபல் பரிசு வென்று நாட்டுக்கு பெருமை தேடித் தருவர் என்றார்.
 கருத்தரங்கில் உயிரி தொழில்நுட்பவியல் துறை இணைப் பேராசிரியர் ஆர்.பாபு ஜனார்த்தனம், உதவிப் போராசிரியர் அ.ராஜசேகர் மற்றும் போராசிரியர்கள், இளம் அறிவியல் ஆராய்ச்சி மாணவர்கள் கலந்து கொண்டனர். வேதியியல் துறை இணைப் போராசிரியர் கே.தினகரன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments