பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை!
சில மாதங்களிலேயே குழந்தைகளின் கைகளுக்கு மோதிரம் பொருந்தாமல் போய்விடும் என திருமாவளவன் கருத்து...
முதல்வர் விஜய்யின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 'ஒரு கிராம் தங்க மோதிரம்' வழங்கும் திட்டம் தொடங்கவிருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தவெக'வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலான இந்தத் திட்டத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் 755 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது 56 சதவீத குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில் நடக்கின்றன. எஞ்சிய 44 சதவீதம் தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன. தனியார் மருத்துவமனைகளில் சாதாரண பிரசவத்துக்குக்கூட ரூ.50 ஆயிரம் முதல் ரூ. ஒரு இலட்சம் வரையில் வசூலிக்கின்றனர். சிசேரியன் என்னும் அறுவை மூலம் நடக்கும் பிறப்பு எனில் இரண்டரை லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூல் செய்கின்றனர். கட்டணம் அதிகம் என்றாலும், ஏழை எளிய குடும்பத்தினர் கூட தாய்-சேய் பாதுகாப்புக் கருதி தனியார் மருத்துவமனைகளையே நாடுகின்றனர். இந்நிலையில், தங்க மோதிரம் வழங்குவதற்காக செலவு செய்யும் இந்த 755 கோடி ரூபாயைக் கொண்டு அரசு மருத்துவமனைகள் ஒவ்வொன்றிலும் தனியார் மருத்துவமனைகளைப்போல அனைத்து உயரிய வசதிகளையும் கொண்ட 'பிரசவ வார்டுகளை' உருவாக்குவதோடு, தேவையான மருத்துவப் பணியாளர்களையும் நியமிப்பது அனைத்துத் தரப்பினருக்கும் பயன் அளிப்பதாக அமையும் என திருமாவளவன் பதிவிட்டுள்ளார்.
Maternity ward needed: Demand to reconsider the thaaimaman thanga mothiram schem thol thirumavalavan
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.