கோயில் பிரசாதம் சாப்பிட்ட பக்தர்களுக்கு வயிற்றுப்போக்கு: 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி
மேட்டுப்பாளையம் பகுதியிலுள்ள மாரியம்மன் கோயிலில் வழங்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்ட 40-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு வயிற்றுப்போக்கு
மேட்டுப்பாளையம் பகுதியிலுள்ள மாரியம்மன் கோயிலில் வழங்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்ட 40-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்ட நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேட்டுப்பாளையம் மகாதேவபுரம் பகுதியிலுள்ள நாடார் காலனியில் முத்துமாரியம்மன் திருக்கோயில் உள்ளது. இக்கோயில் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. அம்மனுக்கு சிறப்பு அலங்கார, அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பக்தர்களுக்கு அவுல், சர்க்கரையுடன் நெய் கலந்த பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், புதன்கிழமை காலை கோயில் பிரசாதம் சாப்பிட்ட பக்தர்களுக்கு திடீரென வயிற்றுப்போக்கு, வாந்திபேதியுடன் உடல் சோர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெண்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் உடனடியாக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், கெட்டுப்போன உணவுப் பொருளை சாப்பிட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். உள்நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்ட 31 பேருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. அரசு மருத்துவமனைத் தலைமை மருத்துவர் சேரலாதன் தலைமையில் அன்னூர் அரசு மருத்துவர் ரவிச்சந்திரன், பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவர் பார்கவி உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். எம்எல்ஏ ஓ.கே. சின்னராஜ் மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட அவுல் பிரசாதத்தில் காலாவதியான நெய் பயன்படுத்தப்பட்டதுதான் இப்பிரச்னைக்குக் காரணம் என தெரியவந்தது. இது குறித்து மேட்டுப்பாளையம் போலீஸார் விசாரனை செய்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.