முகப்பு
கோயம்புத்தூர்

உறவுகளை முதன்மைப்படுத்தும் கோபாலகிருஷ்ணனின் படைப்புகள்: சிற்பி பாலசுப்பிரமணியன்

உறவுகளை முதன்மைப்படுத்துபவையாக எம்.கோபாலகிருஷ்ணனின் படைப்புகள் உள்ளதாக, கோவை கொடிசியா புத்தகத்

Updated On : 23 ஜூலை 2018, 7:43 am IST
பகிர்:

உறவுகளை முதன்மைப்படுத்துபவையாக எம்.கோபாலகிருஷ்ணனின் படைப்புகள் உள்ளதாக, கோவை கொடிசியா புத்தகத் திருவிழாவில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியன் கூறினார்.
எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் எழுதிய "மனைமாட்சி' நாவல் வெளியீட்டு விழா புத்தகத் திருவிழா வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். விழாவில் அவர் பேசியதாவது:
எம்.கோபாலகிருஷ்ணன் கவிஞராக தமிழ் எழுத்துலகில் அறிமுகமானவர். பின்னர், "பிறிதொரு நதிக்கரை' வாயிலாக சிறுகதை ஆசிரியராகவும் முத்திரை பதித்தார். மொழிபெயர்ப்பாளராக சிறந்த ஆக்கங்கள் பலவற்றைத் தந்துள்ளார். பிறகு அவர் அதிகமாக சிறுகதைகள், நாவல்களை எழுதி வருகிறார் . 
இவரது முந்தைய நாவலான "மணல் கடிகை'யில் ஆறு பாகங்கள் இருக்கும். ஆறு வெவ்வேறு கதைகள், ஒரே நேர்க்கோட்டில் இணையும் வகையில் இந்த நாவலை மிகச் சிறப்பாக நெய்திருக்கிறார். 
குடும்ப உறவுகள் நலிவடைந்து வரும் இன்றைய சூழலில், இவர் சித்தரிக்கும் கதாபாத்திரங்கள் தனிமனித அகங்காரத்தை விட உறவுகள் முக்கியமானவை என்பதை ஓங்கி ஒலிக்கும் விதமாக அமைந்துள்ளன என்றார்.
எழுத்தாளர் நாஞ்சில் நாடன் நூலை வெளியிட்டுப் பேசினார். அவர் பேசும்போது, தமிழினி பதிப்பக வெளியீடாக வந்துள்ள மனைமாட்சி சிறப்பான முறையில் அமைந்துள்ளது. எம்.கோபாலகிருஷ்ணன் அமைப்பு ரீதியாக இல்லாமல், தன் எழுத்துகளின் தார்மிக பலத்தால் நிற்கும் வெகு சில தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர் என்றார்.
காந்தியவாதி கண்ணன், தமிழினி இணைய இதழ் ஆசிரியர் கோகுல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நூல் ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் ஏற்புரையாற்றினார். 
விழாவில், ஈரோடு தாமோதர் சந்துரு, கவிஞர் மோகனரங்கன், கவிஞர் மகுடேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் படைப்புகள் குறித்த திறனாய்வு அரங்கம் நடைபெற்றது. 
நிகழ்ச்சிக்கு எஸ். ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். எழுத்தாளர் செல்வேந்திரன் அறிமுக உரையாற்றினார்.  எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகள் குறித்து எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணனும், சிறுகதைகள் குறித்து பேராசிரியர் த.திலீப்குமாரும், "உறுபசி' நாவல் குறித்து எழுத்தாளர் கார்த்திகை பாண்டியனும் திறனாய்வு செய்தனர். அறிவுக்கேணி ஒருங்கிணைப்பாளர் சி.ஆர்.
இளங்கோவன் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments