பெண்ணிடம் பணம் பறித்த பட்டதாரி இளைஞர் கைது
பொள்ளாச்சியில் பெண்ணிடம் பணம் பறித்த பட்டதாரி இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
பொள்ளாச்சியில் பெண்ணிடம் பணம் பறித்த பட்டதாரி இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி சின்னாம்பாளையத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர். இவரது மனைவி பிரேமாவதி (59). இவர் பொள்ளாச்சி பாரத ஸ்டேட் வங்கியில் டிபாசிட் செய்வதற்காக ரூ.19 ஆயிரத்தை புதன்கிழமையன்று கொண்டுவந்துள்ளார். வங்கி அருகே கையில் பணப்பையுடன் நின்றிருந்தபோது அங்கே வந்த இளைஞர் பணப்பையை பறித்துக்கொண்டு ஓடியுள்ளார்.
அருகில் இருந்த பொதுமக்கள் இளைஞரை பிடித்து பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீஸார் நடத்திய விசாரணையில் அந்த இளைஞர் பொள்ளாச்சி அடுத்த நல்லட்டிபாளையத்தை சேர்ந்த அருண்குமார் (21) என்பதும் பிஎஸ்சி பட்டதாரி என்பதும் தெரிந்தது. அருண்குமாரை போலீஸார் கைது செய்தனர்.