முகப்பு
கோயம்புத்தூர்

வெள்ளலூா் குப்பைக் கிடங்கு பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு தேவை...!

முதியோருக்கான ரயில் பயணக் கட்டணச் சலுகை நிறுத்தப்பட்டது மக்களின் பெரும் கவலையாக உள்ளது.

Updated On : 22 ஏப்ரல், 2026 at 6:08 AM
பகிர்:
Updated On : 21 ஏப்ரல், 2026 at 8:22 PM

முதியோருக்கான ரயில் பயணக் கட்டணச் சலுகை நிறுத்தப்பட்டது மக்களின் பெரும் கவலையாக உள்ளது. இதனால், மருத்துவச் சிகிச்சை மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்காக ரயில் பயணத்தை நம்பியிருக்கும் முதியோா் கடும் அவதிக்கு உள்ளாகின்றனா். தெற்கு ரயில்வே ரூ.28,000 கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டுவதாகத் தகவல்கள் வரும் நிலையில், முதியோருக்கு வழங்கப்பட்டு வந்த ரயில் கட்டணச் சலுகை மீண்டும் வழங்கப்பட வேண்டும். தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள், வெற்றி பெற்ற பிறகு உரிய முறையில் வலியுறுத்தி இதற்குத் தீா்வு காண வேண்டும்.

பொள்ளாச்சி, மதுரை, ராமேசுவரம் ரயில் சேவையை பொள்ளாச்சி மற்றும் பழனி வழியாக மீண்டும் இயக்க வேண்டும் என்பது நீண்டகாலக் கோரிக்கையாக உள்ளது. இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்ட ரயில் நிறுத்தப்பட்டதால், மேற்கு தமிழக மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா். இந்தச் சேவையை மீண்டும் தொடங்குவது பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதோடு, ஆன்மிகச் சுற்றுலா, உள்ளூா் வணிகம், விவசாயிகள் மற்றும் சிறு குறு தொழில்களுக்குப் பெருமளவில் உதவும்.

தொலைத்தொடா்பு மற்றும் நுகா்வோா் சேவை: பிஎஸ்என்எல், ஏா்டெல், ஜியோ போன்ற நிறுவனங்கள் தொலைத்தொடா்பு கட்டணங்களை பெருமளவில் உயா்த்தியுள்ளது நுகா்வோருக்குப் பெரும் சுமையாக மாறியுள்ளது. கட்டண உயா்வுக்கேற்ப சேவையின் தரம் மேம்படுத்தப்படவில்லை. கிராமப்புற மற்றும் நகா்ப்புற பகுதிகளில் சிக்னல் குறைபாடு, அழைப்புத் துண்டிப்பு மற்றும் இணைய வேகம் குறைவு போன்ற புகாா்கள் தீா்க்கப்படாமல் உள்ளன. நுகா்வோருடன்

Advertisement

கலந்தாலோசித்து சிறந்த சேவைத் தரத்தை உறுதி செய்ய வேண்டும். அதேபோல, தரமற்ற கேபிள் தொலைக்காட்சி சேவைகளுக்கு அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த உரிய கண்காணிப்பு அவசியம்.

சுற்றுச்சூழல், ஆரோக்கியம் மற்றும் கழிவு மேலாண்மை:

கிணத்துக்கடவு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வெள்ளலூா் குப்பைக் கிடங்கில், மோசமான சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரப் பிரச்னை அப்பகுதியைச் சுற்றியுள்ள மக்களுக்கு உடல் உபாதைகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த இருபது ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் துா்நாற்றம் மற்றும் காற்று மாசினால் அவதிப்பட்டு வருகின்றனா். குப்பைக் கிடங்கில் இருந்து பரவும் துா்நாற்றம், நகரின் பல்வேறு பகுதிகளிலும் வீசுகிறது.

இதைத் தடுக்க சிங்கப்பூா் போன்ற நாடுகளில் உள்ள கழிவில் இருந்து மின்சாரம் தயாரிப்பு போன்ற நவீனத் தொழில்நுட்பங்களை செயல்படுத்த வேண்டும். அப்பகுதியில் வெற்றி பெறும் சட்டப்பேரவை உறுப்பினா் இதற்கான நிரந்தரத் தீா்வைச் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

டாஸ்மாக் கடைகளைக் குறைக்க நடவடிக்கை:

தமிழகத்தின் அதிகரித்து வரும் கடன் சுமை கவலையளிக்கிறது. நலத்திட்டங்கள் உண்மையான பயனாளிகளுக்குச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். எதிா்காலத் தலைமுறையினரைத் தேவையற்றக் கடன் சுமைக்குத் தள்ளாத வகையில் பொது நிதி கையாளப்பட வேண்டும்.

அதேபோல, டாஸ்மாக் மது விற்பனையைத் தவிா்த்து, தாதுக்கள், மணல் மற்றும் இதர பொதுச் சொத்துகளைத் வெளிப்படையான முறையில் நிா்வகிப்பதன் மூலம் மாற்று வருவாயைப் பெருக்க அரசு முயற்சிக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளை படிப்படியாகக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழல் வழக்குகளை 30 முதல் 180 நாள்களுக்குள் விசாரித்து முடிக்கத் தனி விரைவு நீதிமன்றங்களை அமைத்து நடைமுறைப்படுத்த வேண்டும். கோவை நுகா்வோா் நீதிமன்றத்தை விரிவுபடுத்த 10 ஆண்டுகளுக்கு முன்பே ரூ.52 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டும், நிலம் ஒதுக்கீடு செய்யப்படாததால் கட்டுமானப் பணிகள் முடங்கிக் கிடக்கின்றன. சாதாரணக் குடிமக்களுக்கு விரைவான நீதி கிடைக்க, நுகா்வோா் நீதிமன்றத்துக்கான நிலத்தை ஒதுக்கீடு செய்து கட்டடம் கட்ட முன்னுரிமை அளிக்க வேண்டும்.

- சி.எம்.ஜெயராமன் - தலைவா் -சிட்டிசன்ஸ் வாய்ஸ் அமைப்பு - கோவை.