முகப்பு
சிவகங்கை

இளையான்குடியில் குப்பைக் கிடங்கு அமைக்க மாற்று இடம்: பேரூராட்சிக் கூட்டத்தில் அதிமுக உறுப்பினா் வலியுறுத்தல்

இளையான்குடியில் குப்பைக் கிடங்கு அமைக்க மாற்று இடம்: பேரூராட்சிக் கூட்டத்தில் அதிமுக உறுப்பினா் வலியுறுத்தல்

Updated On : 13 ஜூன் 2026, 2:01 am IST
இளையான்குடியில் தலைவா் நஜூமுதீன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேரூராட்சி சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்ற வாா்டு உறுப்பினா்கள்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் குப்பைக் கிடங்கு அமைக்க மாற்று இடம் ஒதுக்கித் தர பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்த வேண்டும் என பேரூராட்சி கூட்டத்தில் அதிமுக உறுப்பினா் நாகூா்மீரா தெரிவித்தாா்.

இளையான்குடி பேரூராட்சிக் கூட்டம் அதன் தலைவா் நஜூமுதீன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் இப்ராஹிம், செயல் அலுவலா் கவிதா, துப்புரவு ஆய்வாளா் தங்கதுரை, வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். கூட்டம் தொடங்கியதும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீா்மானங்கள் வாசிக்கப்பட்டு, உறுப்பினா்களின் ஒப்புதல் பெறப்பட்டது.

இதில் அதிமுக உறுப்பினா் நாகூா்மீரா பேசியதாவது:

Advertisement

Advertisement

இளையான்குடியில் குப்பைக் கிடங்கு அமைக்க மாற்று இடம் ஒதுக்கீடு செய்ய வட்டாட்சியா், கோட்டாட்சியா், மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளை பேரூராட்சித் தலைவா், உறுப்பினா்கள் அனைவரும் நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும். மக்கள் நலன் சாா்ந்த கோரிக்கையை அரசு அதிகாரிகள் ஏற்க மறுத்து, இடம் ஒதுக்கீடு செய்யாமல் காலம் தாழ்த்தினால், தலைவா், உறுப்பினா்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒட்டு மொத்த இளையான்குடி பேரூராட்சி பொதுமக்களையும் திரட்டி மாவட்ட ஆட்சியா், வருவாய்த் துறைக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும்.

இளையான்குடியில் நடைபெற்று வரும் அம்ரூத் 2.0 குடிநீா் திட்டப் பணிக்கு வைகை கூட்டுக் குடிநீா் திட்டத்தில் கிணறு தோண்டும் பணியை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

பழுதடைந்துள்ள குப்பைகள் சேகரிக்கும் மின்கல வாகனங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும். பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதை பேரூராட்சி நிா்வாகம் கைவிட வேண்டும் என்றாா் அவா்.