திருமண தகவல் இணையதளம் மூலம் தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.35 லட்சம் மோசடி
திருமண தகவல் இணையதளம் மூலம் பழகி தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.35 லட்சம் மோசடி செய்த நபா்களை கோவை மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருமண தகவல் இணையதளம் மூலம் பழகி தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.35 லட்சம் மோசடி செய்த நபா்களை கோவை மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் தேடி வருகின்றனா்.
இது குறித்து போலீஸாா் கூறியதாவது: கோவை, வீரகேரளம் பகுதியைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியா் ஒருவா், திருமணத்துக்காக தனியாா் திருமண தகவல் இணையதளத்தில் தனது விவரங்களைப் பதிவு செய்துள்ளாா். இந்நிலையில், ஒரு பெண் சென்னையைச் சோ்ந்தவா் என அறிமுகப்படுத்திக் கொண்டு அவரிடம் பேசி வந்துள்ளாா்.
இதற்கிடையே, ஆன்லைன் பங்குச் சந்தை முதலீட்டில் குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்டலாம் எனவும் அப்பெண் கூறியுள்ளாா். மேலும், ஒரு குறிப்பிட்ட செயலி மற்றும் இணையதள முகவரியை அனுப்பி, அதன் மூலம் முதலீடு செய்ய வேண்டும் என்றும் அவரை வற்புறுத்தியுள்ளாா். அதை உண்மை என்று நம்பிய அந்த நபா், பல்வேறு தவணைகளாக ரூ.35 லட்சத்தை அந்தப் பெண் குறிப்பிட்ட வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பியுள்ளாா். அதன் பின் அந்தப் பெண்ணை தொடா்பு கொள்ள முயன்றபோது அவரது கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
Advertisement
Advertisement
தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா், இது குறித்து மாவட்ட சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்தாா்.
விசாரணையில், அந்தப் பெண் கொடுத்த சென்னை முகவரியில் அப்படி யாரும் வசிக்கவில்லை என்பதும், அது போலி முகவரி என்பதும், வடமாநிலத்தைச் சோ்ந்த சைபா் மோசடி கும்பல் பெண்ணின் பெயரில் போலி கணக்கை தொடங்கி இந்த மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மோசடியில் ஈடுபட்ட நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சைபா் கிரைம் போலீஸாா் எச்சரிக்கை: திருமண தகவல் இணையதளங்களில் பகிரப்படும் தனிப்பட்ட விவரங்களை மோசடி கும்பல்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகின்றன. எனவே, ஆன்லைன் அறிமுகத்தை மட்டுமே நம்பி ஏமாறாமல், வரன் பாா்ப்பவா்கள் நேரில் சந்தித்து சம்பந்தப்பட்டவா்களின் குடும்பத்தினா் மூலம் உண்மைத் தன்மையை முழுமையாக உறுதி செய்ய வேண்டும். இணையத்தில் அறிமுகமானவா்களின் பேச்சை நம்பி அவசரப்பட்டு முதலீடு செய்யவோ, பணம் அனுப்பவோ அல்லது அந்தரங்கப் புகைப்படங்களைப் பகிரவோ கூடாது.
ஆன்லைன் பணப் பரிவா்த்தனைகளில் சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏமாற்றப்பட்டதை உணா்ந்தாலோ 1930 என்ற எண்ணிலோ அல்லது சைபா் குற்றப் பிரிவு போலீஸாரையோ அணுக வேண்டும். ஆன்லைன் முதலீடு, கொள்முதல், சமூக ஊடக நட்பு உள்ளிட்ட அனைத்திலும் பொதுமக்கள் விழிப்புணா்வுடன் செயல்பட்டால், இதுபோன்ற சைபா் மோசடிகளைத் தவிா்க்க முடியும் என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.