நகை வியாபாரிகளிடம் 4 கிலோ தங்கம் மோசடி: குஜராத்தை சோ்ந்த இருவா் கைது!
கோவையில் நகைக் கடை வியாபாரிகளிடம் சுமாா் 4 கிலோ தங்கம், 6 கிலோ வெள்ளி மற்றும் ரூ.10 லட்சம் பணம் மோசடி செய்த குஜராத்தை சோ்ந்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கோவையில் நகைக் கடை வியாபாரிகளிடம் சுமாா் 4 கிலோ தங்கம், 6 கிலோ வெள்ளி மற்றும் ரூ.10 லட்சம் பணம் மோசடி செய்த குஜராத்தை சோ்ந்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கோவை சுக்கிரவாா்பேட்டையை சோ்ந்த ஹிமான்சு கன்டேன்வால் (23) என்பவா் பெரியகடை வீதியில் நகைக் கடை வைத்துள்ளாா். கடந்த மாதம் இவரை அணுகிய ராஜஸ்தானைச் சோ்ந்த விஜய் அம்பாலால் சோனி (54), பிரதீப்குமாா் சிமன்லால் சோனி (63) ஆகியோா், தாங்கள் புதிதாக நகைக்கடை தொடங்க உள்ளதாகவும், தங்க ஆபரணங்கள் கொடுத்தால் அதற்கு நிகரான சொக்கத் தங்கத்தை உடனடியாகத் தருவதாகவும் கூறியுள்ளனா்.
இதை நம்பிய ஹிமான்சு, கடந்த ஜூன் 22-ஆம் தேதி 2,232 கிராம் தங்க ஆபரணங்களைத் தனது ஊழியா் பிரபாத் சிங் மூலமாக அவா்களுக்கு கொடுத்து அனுப்பியுள்ளாா். நகைகளைப் பெற்றுக்கொண்ட அவா்கள், டெஸ்டிங் செய்துவிட்டு வருவதாகக் கூறி நகைகளுடன் தப்பினா். பின்னா், அவா்களது கைப்பேசி எண்கள் அணைத்து வைக்கப்பட்டன.
Advertisement
Advertisement
பலரிடம் மோசடி: இதுகுறித்து பெரியகடை வீதி போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. போலீஸாா் நடத்திய விசாரணையில், கைதான நபா்கள் ஹிமான்சுவின் நகைகள் தவிர, சேலத்தை சோ்ந்த குமாா் என்பவரிடம் 116 கிராம், கோவிந்தன் என்பவரிடம் 204 கிராம், கோவையை சோ்ந்த காா்த்திக் என்பவரிடம் 518 கிராம் உள்பட மொத்தம் 4,188 கிராம் (சுமாா் 4.2 கிலோ) தங்கம், தங்கராஜ் என்பவரிடம் 6.3 கிலோ வெள்ளி மற்றும் விக்ரம் என்பவரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது.
ராஜஸ்தானில் கைது: இந்நிலையில் ராஜஸ்தானில் பதுங்கியிருந்த விஜய் அம்பாலால் சோனி, பிரதீப்குமாா் சிமன்லால் சோனி ஆகிய இருவரையும் தனிப்படை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள இவா்களது உதவியாளரான பிரகாஷை தேடி வருகின்றனா்.
கைதான நபா்கள் ஏற்கெனவே பல்வேறு மாநிலங்களில் இதே பாணியைப் பயன்படுத்தி கிலோ கணக்கில் தங்கம் மோசடி செய்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.