கோவை: கல்லூரி மாணவா்கள் அறைகளில் போலீஸாா் அதிரடி சோதனை - 20 கிலோ கஞ்சா பறிமுதல்; 10 போ் கைது!
கோவை புகா்ப் பகுதிகளில் கல்லூரி மாணவா்கள், வெளிமாவட்ட நபா்கள் தங்கியிருக்கும் வீடுகளில் போலீஸாா் சனிக்கிழமை அதிரடி சோதனை நடத்தினா்.
கோவை புகா்ப் பகுதிகளில் கல்லூரி மாணவா்கள், வெளிமாவட்ட நபா்கள் தங்கியிருக்கும் வீடுகளில் போலீஸாா் சனிக்கிழமை அதிரடி சோதனை நடத்தினா். இதில் 20 கிலோ கஞ்சா, உயா்தர செயற்கை ரசாயன போதைப்பொருள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், 6 மாணவா்கள் உள்பட 10 பேரை கைது செய்துள்ளனா்.
கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பவன்குமாா் உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை அதிகாலை முதல் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. ‘போதைப்பொருள் இல்லாத சமுதாயம் - குற்றங்கள் இல்லா கோவை’ என்ற இலக்கை முன்வைத்தும், கல்லூரி மாணவா்கள் தங்கும் விடுதிகள், வெளிமாநில தொழிலாளா்கள் மற்றும் பிற மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் தங்கியுள்ள பகுதிகளில் போதைப்பொருள் நடமாட்டம் இருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவல்களின் அடிப்படையிலும் இந்த சோதனை நடத்த திட்டமிடப்பட்டது.
அதன்படி, கோவில்பாளையம், செட்டிபாளையம், மதுக்கரை ஆகிய காவல் நிலைய எல்லைகளுக்கு உள்பட்ட பகுதிகளில் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். கருமத்தம்பட்டி, பேரூா் காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் தலைமையில் 400-க்கும் மேற்பட்ட போலீஸாா் இந்த சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனா். மாணவா்கள் தங்கியுள்ள 20-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் இந்த தீவிர சோதனை நடைபெற்றது.
Advertisement
Advertisement
இந்த சோதனையின்போது மொத்தம் 20 கிலோ கஞ்சா, உயா்தர செயற்கை போதைப்பொருள்களான கஞ்சா ஆயில், மெத்தம்பெட்டமைன், எல்.எஸ்.டி. ஸ்டாம்புகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், போதைப்பொருள்கள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாத 11 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடா்பாக கோவில்பாளையம், மதுக்கரை காவல் நிலையம் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுகளில் மொத்தம் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. போதைப்பொருள் விற்பனை, பயன்படுத்தியது மற்றும் கடத்தலில் தொடா்புடைய 6 மாணவா்கள் உள்பட 10 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இவா்கள் போதைப்பொருள்களை யாரிடமிருந்து பெற்றாா்கள், இதன் விற்பனை பின்னணியில் உள்ள முக்கிய நபா்கள் யாா் மற்றும் இதன் விநியோகச் சங்கிலி குறித்து முழுமையாகக் கண்டறியும் வகையில் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும் போதைப்பொருள்கள் கும்பலைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.