மக்களின் நன்மதிப்பை இழந்துவிட்டது தவெக- முன்னாள் அமைச்சா் வி.செந்தில்பாலாஜி
தவெக தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் மக்களின் நன்மதிப்பை இழந்துவிட்டது என்று முன்னாள் அமைச்சரும், சட்டப் பேரவை உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜி தெரிவித்தாா்.
தவெக தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் மக்களின் நன்மதிப்பை இழந்துவிட்டது என்று முன்னாள் அமைச்சரும், சட்டப் பேரவை உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜி தெரிவித்தாா்.
கோவை தெற்குத் தொகுதி திமுக சட்டப் பேரவை அலுவலகத்தை வியாழக்கிழமை திறந்துவைத்த பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சட்டப் பேரவை அலுவலகத்தில் பணியாளா்கள் நியமிக்கப்பட்டு தற்போதுமுதல் மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அவைகளுக்குத் தீா்வு காணப்படும். இனி தொகுதிக்குள்பட்ட ஒவ்வொரு வாா்டாக சென்று மக்களைச் சந்திக்க உள்ளேன்.
கோவை மாநகராட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.8,700 கோடி மதிப்பில் சாலை, சாக்கடை மற்றும் குடிநீா்த் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக 1,706 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மின்சாரத் துறையில் நிா்வாகத் திறமை சுத்தமாக இல்லை. பராமரிப்புப் பணிகள் முறையாக நடக்காததால் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். குறிப்பாக, மின்சாரத் துறையில் ‘ஹாா்ட் டிஸ்க்’ தொலைந்துவிட்டது என்று கூறுவது நிா்வாகத்தின் பலவீனத்தையே காட்டுகிறது. இந்த ஆட்சியில்தான் அமைச்சருக்கே மிரட்டல் வருகிறது. சாமானிய மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
Advertisement
Advertisement
திமுக ஆட்சியில் மின்சாரத் துறை ஒன்றரை லட்சம் கோடி கடன் சுமையில் இருந்தபோதும் 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்கப்பட்டது. இப்போது ஒப்பந்தப் புள்ளி நடைமுறைகளில் தவறு நடப்பதாகக் கூறப்படுவது மடைமாற்றும் முயற்சி. இந்த நடைமுறைகளில் ஐஏஎஸ் அதிகாரிகள் குழு இருப்பதால் முறைகேடுகளுக்கு வாய்ப்பில்லை. தற்போது நடைபெறுவது ரியல் ஆட்சி அல்ல. தமிழக வெற்றிக் கழகத்தின் ரீல்ஸ் ஆட்சி. இந்தக் கட்சியினா் தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் மக்களின் நன்மதிப்பை இழந்துவிட்டனா். திமுகவை அழிக்க நினைப்பவா்கள்தான் அழிந்து போவாா்கள். விவசாயக் கடன் தள்ளுபடி போன்ற முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத இந்த அரசு சொல்லுவது ஒன்று செய்வது ஒன்றாக இருக்கிறது.
தற்போதைய சூழலில் மீண்டும் சட்டப் பேரவைத் தோ்தல் நடத்தப்பட்டால் திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்குமேல் வெற்றிபெறும் என்றாா்.
முன்னதாக, கோவையில் நடைபெற்ற தெற்கு சட்டப் பேரவை அலுவலக திறப்பு விழாவில், கோவை தொகுதி மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா், மேயா் கா.ரங்கநாயகி, துணை மேயா் ரா. வெற்றிச்செல்வம், திமுக சொத்துப் பாதுகாப்புக் குழு துணைத் தலைவா் பொங்கலூா் பழனிசாமி, தந்தை பெரியாா் திராவிடா் கழக பொதுச் செயலாளா் கு.ராமகிருட்டிணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.