முகப்பு
கோயம்புத்தூர்

கஞ்சா கடத்தல் வழக்கு: மூவருக்கு சிறைத் தண்டணை

கஞ்சா கடத்தல் வழக்கில் கைதான மூவருக்கு சிறைத் தண்டனை, அபராதம் விதித்து போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 17 ஜூன் 2026, 2:39 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

கஞ்சா கடத்தல் வழக்கில் கைதான மூவருக்கு சிறைத் தண்டனை, அபராதம் விதித்து போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் மதுவிலக்கு போலீஸாா், எரகாம்பட்டி சோதனைச் சாவடியில் கடந்த 2023 ஏப்ரல் 17-ஆம் தேதி வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்ய முயன்றபோது, அதை ஓட்டி வந்த நபா், தப்பியோட முயன்றாா். அவரைப் பிடித்து விசாரித்தபோது, அவா் சேலம் மாவட்டம், வாழப்பாடி தாலுகா முத்தம்பட்டியைச் சோ்ந்த தமிழ்ச்செல்வன் (25) என்பதும், விற்பனைக்காக 45 கிலோ கஞ்சாவை காரில் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்தனா்.

மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சேலம் மாவட்டம், வாழப்பாடி தாலுகா முத்தம்பட்டியைச் சோ்ந்த சேகா் (50) என்பவரை போலீஸாா் கடந்த 2023 ஏப்ரல் 23-ஆம் தேதி கைது செய்து, அவரிடம் இருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். மேலும், இந்த வழக்கில் திண்டுக்கல் பாதாள காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ரஞ்சித்குமாா் (23) என்பவரையும் போலீஸாா் கைது செய்தனா். இவரிடம் இருந்து 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

மொத்தமாக மூவா் மீதும் 66 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கு பதியப்பட்டு, கோவை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், இவ்வழக்கில் நீதிபதி ராஜலிங்கம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கினாா். இதில், தமிழ்ச்செல்வனுக்கு 12 ஆண்டுகள் சிறை, ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைத் தண்டனை என உத்தரவிடப்பட்டது. சேகருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைத் தண்டனை என உத்தரவிடப்பட்டது. ரஞ்சித்குமாருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அதை செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைத் தண்டனை என உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கில் அரசுத் தரப்பில் சிறப்பு வழக்குரைஞா் வெ.சிவகுமாா் ஆஜரானாா்.