FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

இரட்டைக் கொலை வழக்கில் 4 பேரின் ஆயுள் சிறைத் தண்டனை ரத்து

வேடசந்தூரில் நிகழ்ந்த இரட்டைக் கொலை வழக்கில் 4 பேருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த ஆயுள் சிறைத் தண்டனையை ரத்து செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 4 ஜூன் 2026, 4:18 am IST
நீதிமன்றம் - IANS
பகிர்:

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் நிகழ்ந்த இரட்டைக் கொலை வழக்கில் 4 பேருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த ஆயுள் சிறைத் தண்டனையை ரத்து செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் சேடபட்டியைச் சோ்ந்தவா் கண்ணன். மென்பொருள் பொறியாளரான இவா், தாடிக்கொம்பு பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் மகளைத் திருமணம் செய்தாா். சில மாதங்களில் கருத்து வேறுபாடு காரணமாக, தம்பதியா் பிரிந்தனா்.

இந்த நிலையில், கடந்த 2012-ஆம் ஆண்டு மே 17-ஆம் தேதி கண்ணனும், அவரது உறவினா் பெரியசாமியும் கொலை செய்யப்பட்டனா். இதுதொடா்பாக தாடிக்கொம்பை சோ்ந்த செல்வராஜ் உள்பட 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Advertisement

Advertisement

வழக்கின் விசாரணை திண்டுக்கல் கூடுதல் மாவட்ட, அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கு விசாரணை நிறைவடைந்த பிறகு, செல்வராஜ், முத்துக்குமாா், செல்வபாண்டி, தூங்கான் என்ற ஊராத்தேவா் ஆகிய 4 பேருக்கும் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தத் தீா்ப்பை ரத்து செய்யக் கோரி, செல்வராஜ் உள்ளிட்ட 4 பேரும் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனா்.

இந்த மேல்முறையீட்டு மனுக்கள் உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆனந்த்வெங்கடேஷ், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வில் விசாரிக்கப்பட்டது. விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் புதன்கிழமை பிறப்பித்த உத்தரவு:

‘இந்த வழக்கை காவல் துறை விசாரணை அலுவலா் சரியாக விசாரிக்கவில்லை. விசாரணை அலுவலா் சம்பவ இடத்துக்குச் செல்லாமல், காவல் நிலையத்தில் இருந்தபடியே விசாரணையை மேற்கொண்டதாகத் தெரியவருகிறது. இருவா் கொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணை சரியாக நடைபெறாதது வேதனைக்குரியது. காவல் துறையின் அலட்சியமான விசாரணைக்கு இந்த வழக்கு ஓா் உதாரணம்.

வழக்கின் முக்கிய சாட்சிகள் விசாரணைக்கு தவிா்க்கப்பட்டனா். அவா்களிடம் குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை. விசாரணை அலுவலரின் விசித்திரமான செயல்பாடுகளால் மனுதாரா்கள் மீதான குற்றச்சாட்டுகளை அரசுத் தரப்பு சரிவர நிரூபிக்கத் தவறிவிட்டது.

எனவே, தொடா்புடைய விசாரணை அலுவலரிடம் பணி விதிகள் அடிப்படையில் விளக்கம் கேட்டு குறிப்பாணை அனுப்பி, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மனுதாரா்கள் 4 பேருக்கும் விசாரணை நீதிமன்றம் விதித்த ஆயுள் சிறைத் தண்டனை ரத்து செய்யப்படுகிறது’ என்றனா் நீதிபதிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments