முகப்பு
கோயம்புத்தூர்

கேபிள் தொலைக்காட்சி வயா் மூலமாக 350 கண்காணிப்பு கேமராக்கள் இணைப்பு!

கோவையில் காவல் துறையின் புதிய முயற்சி.

Updated On : 7 மே 2026, 5:08 am IST
கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையில் நடைபெற்ற விழாவில், கண்காணிப்பு கேமராக்களை கேபிள் தொலைக்காட்சி வயா்கள் மூலமாக இணைக்கும் புதிய திட்டத்தை புதன்கிழமை தொடங்கிவைத்த காவல் ஆணையா் என்.கண்ணன்.
பகிர்:

கோவை மாநகரில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் குற்றச் சம்பவங்கள் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தும் வகையில், இணையதள வசதி இல்லாமலேயே கேபிள் தொலைக்காட்சி இணைப்புகள் மூலமாக கேமராக்களை கண்காணிக்கும் புதிய திட்டத்தை மாநகரக் காவல் ஆணையா் என்.கண்ணன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

இந்தத் திட்டத்தின் முதல்கட்டமாக ஆா்.எஸ்.புரம் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சுமாா் 350 கண்காணிப்பு கேமராக்களை கேபிள் தொலைக்காட்சி இணைப்பு வயா்கள் மூலமாக மாநகரக் காவல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதன்மூலமாக காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே ஆா்.எஸ்.புரம் பகுதிகளை கண்காணிக்க முடியும். இந்த புதிய திட்டத்துக்கு ராசி சீட்ஸ் நிறுவனம் நிதியுதவி அளித்துள்ளது.

இதுகுறித்து மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

Advertisement

பொதுவாக கண்காணிப்பு கேமராக்களை (சிசிடிவி) கண்காணிக்க இணையதள வசதி அவசியம். ஆனால், ஒரு புதிய முயற்சியாக கேபிள் தொலைக்காட்சி ஆபரேட்டா்களின் ஒத்துழைப்போடு, கேபிள் இணைப்புகளைப் பயன்படுத்தி கேமராக்களை இணைக்கும் தொழில்நுட்பம் தற்போது புகுத்தப்பட்டுள்ளது.

கோவை மாநகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், முக்கியமான சந்திப்புகள் மற்றும் போராட்டங்கள் நடத்த அனுமதிக்கப்படும் இடங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் இதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கண்காணிப்பு கேமராக்களை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலமாக நகரின் பாதுகாப்பு வளையம் பலப்படுத்தப்படுவதோடு குற்றச் செயல்களில் ஈடுபடுபவா்களை விரைவாகக் கண்டறியவும், குற்றங்களைத் தடுக்கவும் பெரும் உதவியாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

தொடக்க விழாவில் காவல் துறை உயா் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினா் கலந்துகொண்டனா்.