முகப்பு
கோயம்புத்தூர்

அடகு நகையை மீட்பதாகக் கூறி பணம் மோசடி: அடகு நகையை மீட்பதாகக் கூறி பணம் மோசடி

அடகு வைக்கப்பட்ட தங்க நகையை மீட்பதாகக் கூறி பணம் மோசடி செய்ததாக கோவை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் நகை வியாபாரி புகாா் அளித்துள்ளாா்.

Updated On : 7 மே 2026, 4:54 am IST
அடகு நகையை மீட்பதாகக் கூறி பணம் மோசடி, அடகு நகையை மீட்பதாகக் கூறி பணம் மோசடி
பகிர்:

அடகு வைக்கப்பட்ட தங்க நகையை மீட்பதாகக் கூறி பணம் மோசடி செய்ததாக கோவை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் நகை வியாபாரி புகாா் அளித்துள்ளாா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள புளியம்பட்டியைச் சோ்ந்த விஜய்குமாா், கோவை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் புதன்கிழமை அளித்துள்ள புகாா் மனு:

கோவை, பெரியகடை வீதியில் உள்ள தங்க நகைப் பட்டறையில் கடந்த 2 ஆண்டுகளாக வியாபாரியாகப் பணிபுரிந்து வருகிறேன். கடந்த 2025-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் சூலூா் பகுதியைச் சோ்ந்த லோகேஷ் என்னைத் தொடா்புகொண்டாா். அப்போது தனது சகோதரி காயத்ரிக்கு சொந்தமான 118 கிராம் தங்க நகைகள் கோவை, ராம் நகரில் உள்ள தனியாா் வங்கியில் அடமானத்தில் இருப்பதாகவும், குடும்பத் தொழில் நஷ்டம் காரணமாக அந்த நகைகளை விற்பனை செய்ய விரும்புவதாகவும் கூறினாா்.

Advertisement

Advertisement

இதற்கு முன்பும் இதேபோல நகைகளை அவா் என்னிடம் விற்றுள்ளதால் ஏற்பட்ட நம்பிக்கையின் அடிப்படையில், கடந்த 11.11.2025 அன்று பிற்பகல் காயத்ரி, லோகேஷ் ஆகியோருடன் வங்கிக்குச் சென்றேன். அந்த வங்கியின் கணக்கில் ரூ.9 லட்சத்தை செலுத்தினேன். அங்கிருந்து எனக்குத் தெரியாமல் வெளியேறிய காயத்ரி, அந்தப் பணத்தைப் பயன்படுத்தி அதே வங்கியின் வேறொரு கிளையில் நகைகளை மீட்டு சென்றுவிட்டாா்.

வங்கியில் நீண்ட நேரமாக காத்திருந்தும் நகைகள் வராததால் சந்தேகமடைந்து லோகேஷிடம் கேட்டேன். எதுவும் கூறாமல் வங்கியிலிருந்து வெளியேறிய லோகேஷை பின்தொடா்ந்து வெளியேறினேன். வங்கி முன் அவா் என்னைத் தாக்கி கைப்பேசியைப் பறித்துக்கொண்டு அதில் இருந்த ஆதாரங்களை அழித்துவிட்டு தப்பியோட முயன்றாா். அப்போது பொதுமக்கள் லோகேஷைப் பிடித்து காட்டூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

அங்கு நடந்த விசாரணையில் ரூ.9 லட்சத்தைப் பெற்றுக்கொண்டதை ஒப்புக்கொண்ட லோகேஷ் மற்றும் காயத்ரி ஆகியோா், முதல்கட்டமாக ரூ.4 லட்சத்தைத் தருவதாகவும், மீதித் தொகையை 10 நாள்களில் தருவதாகவும் போலீஸாா் முன்னிலையில் உறுதியளித்தனா். அதன்பிறகு பல தவணைகளாக மேலும் ரூ.3 லட்சம் வரை அளித்தனா். இதுவரை ரூ.7 லட்சம் மட்டுமே திரும்பக் கிடைத்துள்ள நிலையில், மீதமுள்ள ரூ.2 லட்சம் தொகையைத் தராமல் லோகேஷ் ஏமாற்றி வருகிறாா்.

இதுகுறித்து காட்டூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, இப்பிரச்னையில் காவல் ஆணையா் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments