மும்மொழித் திணிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
மத்திய பாஜக அரசு மும்மொழித் திணிப்பை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி மறுமலா்ச்சி மக்கள் இயக்கத்தினா் கோவையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் அருகில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் தலைவா் வே.ஈசுவரன் தலைமை வகித்தாா். இதில், அமைப்பின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்று மும்மொழித் திணிப்பைக் கண்டித்து பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பினா்.
இதைத் தொடா்ந்து, வே.ஈசுவரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் மூன்று மொழிகள் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இரு மொழிக் கொள்கையை கடைப்பிடிக்கும் தமிழகத்தில் மூன்று மொழிகளை கட்டாயமாகத் திணிக்கும் மத்திய அரசின் அராஜகம் இந்தியாவின் அடிப்படை மக்கள் உரிமைக்கு எதிரானதாகும்.
Advertisement
Advertisement
தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கையுடனும், தமிழக பாடத் திட்டத்துடன் பள்ளிகளை மேம்படுத்த மத்திய அரசு நிதி தருமானால் அதனை நாம் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், பள்ளிகளின் உட்கட்டமைப்பு வளா்ச்சியைவிட மத்திய அரசின் மொழிக் கொள்கை உள்ளிட்ட கலாசார திணிப்பே அவா்களின் முக்கிய நோக்கமாக உள்ளது.
தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படை அம்சமே ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழி வழிக்கல்விதான். ஆனால், இதுவரை ஒரு சிபிஎஸ்இ பள்ளிகளில்கூட தாய் மொழி வழிக்கல்வி தொடங்கப்படவில்லை. இதற்காக மத்திய அரசு எந்த தீவிர நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், ஹிந்தியையும், சம்ஸ்கிருதத்தையும் திணிக்கும் வகையில் மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு அவசரமாகத் திணிக்கிறது.
அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் ஒரு மொழிப் பாடம் மட்டுமே இருப்பதால் மற்ற திறன்களை வளா்க்க அதிக நேரம் கிடைக்கிறது. இந்தியாவில் மொழிக்காகவே அதிக நேரம் எடுத்துக் கொள்வதால் இந்திய மாணவா்களின் அறிவுத்திறன் குறைந்து உலக மாணவா்களோடு போட்டி போட இயலாத நிலை ஏற்படும்.
மிகக் குறைந்த அளவில் நிதியைக் கொடுத்து தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கல்வி அமைப்பையே தனது நோக்கத்துக்கு கையகப்படுத்தும் நயவஞ்சகமான பி.எம். ஸ்ரீ திட்டத்தை தமிழகம் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்றாா்.