அரசு சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்
கோபி, சிறுவலூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையம் அரசு உயர் நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.
கோபி, சிறுவலூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையம் அரசு உயர் நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடக்கி வைத்து, தாய்மார்களுக்கு அம்மா குழந்தை நலப் பரிசுப் பெட்டகத்தை வழங்கினார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது:
கிராமத்தில் வாழும் மக்கள் தங்களது உடல்நலன் எப்படியுள்ளது என்பதை அறிந்து கொள்ளும் விதமாக இந்த மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. பள்ளிக் கல்வித் துறையில் மிக விரைவில் சில மாற்றங்களை உருவாக்க முதல்வரின் ஒப்புதலுடன் பணிகள் நிறைவேற்றப்பட உள்ளன. பெற்றோர் ஆசிரியர் சங்கம் என்பது பள்ளிக் கல்விக்கு ஒரு அச்சாணியைப் போன்றது, இந்த அச்சாணி சில இடங்களில் சரியாக செயல்படுவதில்லை என புகார்கள் வந்துள்ளன. அதை மனதில் கொண்டு இந்த அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
வருடத்துக்கு மூன்று முறை பெற்றோர்-ஆசிரியர் சங்கக் கூட்டம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆண்டு விழா நடத்த வேண்டும் என இந்த அரசு உத்தரவிட்டுள்ளது.
மாணவர்கள் சேர்க்கையைப் பொறுத்தவரை நாற்பது மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் எனும் முறையில் சேர்க்கை நடத்தப்பட்டுள்ளது. பள்ளிகளில் கூடுதலாக மாணவர்களைச் சேர்த்துள்ள ஆசிரியர்களைப் பாராட்டுவது மட்டுமின்றி கனவு ஆசிரியர் எனும் விருதும் வழங்கப்பட்டு வருகிறது. பள்ளிகளில் ஆசிரியர் சிறந்து பணியாற்றும் வகையில் இந்தக் கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது.
விளையாட்டு மைதானம் இல்லாத பள்ளிகளுக்கு அந்தத் துறை அமைச்சரிடம் பேசி முதல்வரின் ஒத்துழைப்புடன் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும்.
தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு வந்தால் அந்தப் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.