ஈரோட்டில் தமாகா இளைஞரணி மாநிலச் செயற்குழுக் கூட்டம்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி மாநிலச் செயற்குழு கூட்டம் ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி மாநிலச் செயற்குழு கூட்டம் ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இளைஞர் அணி மாநிலத் தலைவர் எம்.யுவராஜா தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் அபிராமி, நிர்வாகிகள் அருண் பிரகாசம், கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தமிழில் மருத்துவத் தகுதித் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக 196 கூடுதல் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் விதித்த இடைக்கால உத்தரவை ரத்து செய்யவேண்டும்.
மேலும், வினாத்தாளில் ஏற்படும் மொழிப் பெயர்ப்புத் தவறுகளை எதிர்காலத்தில் களைய நடவடிக்கை எடுக்கவேண்டும். மாசுக்கட்டுப்பாட்டு விதிகளில் உள்ள பட்டியலில் இருந்து பட்டாசுத் தொழிலை நீக்கி, தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கவேண்டும். மத்திய, மாநில அரசுகள் ஜவுளித் தொழில், தீப்பெட்டி, அச்சுத் தொழிலுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டியை நீக்க வேண்டும்.
பெருந்துறை சிப்காட் பகுதிகளில் சேமிப்புக் கிடங்குகளில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள திடக் கழிவுகளை உடனடியாக அகற்றவேண்டும். டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்னையான காவிரி நீர் கடைமடை விவசாயிகளுக்கும் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலைத் துறையால் அறிவிக்கப்பட்டுள்ள சேலம் சென்னை இடையிலான பசுமை வழிச்சாலைத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகளைக் களையவேண்டும். ஏற்கெனவே உள்ள சென்னை, போரூர், திருவண்ணாமலை, ஊத்தங்கரை, அரூர், சேலம் சாலையை 4 வழிச்சாலையாக மாற்றுதவற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமாகா மாநிலப் பொதுச் செயலர் விடியல் எஸ்.சேகர், மத்திய மாவட்டத் தலைவர் எஸ்.விஜயகுமார், இளைஞர் அணித் தலைவர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.