உலக அளவில் சகோதரத்துவத்தை நிலைநாட்டியவர் விவேகானந்தர்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
உலக அளவில் ஆன்மிகத்தையும், சகோதரத்துவத்தையும் நிலைநாட்டியவர் விவேகானந்தர் என்றார் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்.
உலக அளவில் ஆன்மிகத்தையும், சகோதரத்துவத்தையும் நிலைநாட்டியவர் விவேகானந்தர் என்றார் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்.
ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியில், மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த. ஸ்டாலின் குணசேகரன் எழுதிய "விடுதலைக்கு விதை தூவிய விவேகானந்தர்' , "மனிதனுக்கு மரணமில்லை' ஆகிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கல்லூரித் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர் தலைமை வகித்தார். இதில் பங்கேற்று, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது:
ஈரோடு, கருங்கல்பாளையத்தில் பாரதியார் கடைசியாக பேசிச் சென்ற தலைப்பு, "மனிதனுக்கு மரணமில்லை'. மண்ணில் பிறந்த அனைவரும் மரணமில்லாத வாழ்வு பற்றி சிந்திக்கிறோம். அதுகுறித்து இந்த உலகில் கடுமையான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அறிவியல் ரீதியாக சந்திரனுக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் விண்வெளியில் பயணிக்கும் வீரர் 6 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரை பயிற்சி எடுக்கவேண்டும். விண்வெளியில் சந்திர கிரகத்துக்குச் சென்று வரும்போது ஈர்ப்பு விசை, குறைந்த காற்று, சுவாசப் பிரச்னை, கதிர்வீச்சு போன்றவற்றின் தாக்கத்தால் அந்த வீரர் விரைவில் முதுமை அடைகிறார். இந்த நிகழ்வைத் தடுக்கும் நோக்கிலான ஆராய்ச்சி ஒருபுறமும், மனிதர்களின் முதுமையையும், மரணத்தையும் தள்ளிப்போடும் வகையில் தீவிர ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.
தமிழ் மரணமில்லாத மொழி எனும் நிலையை உருவாக்கிட, தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர் உள்ளிட்ட பல்லாயிரம் பேரின் தியாகம் செய்துள்ளனர் என்றார்.
விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசியதாவது:
ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து நாடு திரும்பிய விவேகானந்தரிடம், இந்தியாவில் உள்ள ஏழைகளின் நிலை பற்றி கேட்டனர். "ஐரோப்பியாவிலும் ஏழைகள் உள்ளனர். ஆனால், இந்தியாவில் உள்ளவர்கள் நிலை மோசமாக உள்ளது. அவர்களுக்கான மாற்றத்தை கல்வி மட்டுமே தரும் ' என அவர் பதிலளித்தார்.
உலக சமுதாயத்துக்கு யார் வழிகாட்டியாகத் திகழ்கிறாரோ அவர்தான் உண்மையான துறவி. சிகாகோ மாநாட்டில் விவேகானந்தர் ஆற்றிய உரைதான் உலக அளவில் ஆன்மிகத்தையும், சகோதரத்துவத்தையும் நிலைநாட்டியது என்றார்.
"விடுதலைக்கு விதை தூவிய விவேகானந்தர் ' எனும் நூலை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வெளியிட்டார். முதல் பிரதியை யுஆர்சி குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் சி.தேவராஜன் பெற்றுக் கொண்டார். "மனிதனுக்கு மரணமில்லை' எனும் நூலை இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை வெளியிட்டார். அதன் முதல்பிரதியை இந்து கல்வி நிலையத் தலைவர் கே.கே.பாலுசாமி பெற்றுக் கொண்டார்.
நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சண்முகம் சரவணன் முன்னிலை வகித்தார். நூலாசிரியர் த.ஸ்டாலின் குணசேகரன் ஏற்புரையாற்றினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.