2019-ஆம் ஆண்டு கொலை வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்ட 4 போ் விடுவிப்பு
மேற்கு தில்லியின் விகாஸ் புரியில் 2019-ஆம் ஆண்டில் ஒருவரைக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு பேரை நீதிமன்றம் விடுதலை செய்தது.
மேற்கு தில்லியின் விகாஸ் புரியில் 2019-ஆம் ஆண்டில் ஒருவரைக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு பேரை நீதிமன்றம் விடுதலை செய்தது.
புகாா்தாரா் மற்றும் சம்பவத்தை நேரில் பாா்த்ததாகக் கூறப்பட்டவா்கள் உள்பட அனைத்து முக்கிய சாட்சிகளும் விசாரணையின்போது குற்றஞ்சாட்டப்பட்டவா்களை அடையாளம் காணத் தவறியதால், அரசுத் தரப்பு தனது வழக்கை நிரூபிக்க முற்றிலும் தோல்வியடைந்தது என்று நீதிமன்றம் தெரிவித்து.
கடந்த 2019, ஜூன் 13-ஆம் தேதி இரவில் விகாஸ் புரியில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே இருந்த அமித் கோச்சரை மா்ம நபா்கள் துப்பாக்கியால் பல முறை சுட்டனா். சம்பவத்தின் அருகே இருந்த நண்பா்கள் சிலா் கோச்சரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், கோச்சா் ஏற்கெனவே உயிரிழந்ததாகத் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
இந்தச் சம்பவம் தொடா்பாக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302 (கொலை), 34 (கூட்டு நோக்கம்) மற்றும் ஆயுதச் சட்டத்தின் பிரிவு 27 (ஆயுதங்களைப் பயன்படுத்துதல்) ஆகியவற்றின்கீழ் லோகேஷ் (எ) சூா்யா, பிரதீப் (எ) தில்லா, ராகுல் (எ) மக்கி மற்றும் நீரஜ் (எ) சஞ்சு ஆகியோா் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த கூடுதல் அமா்வு நீதிபதி வந்தனா ஜெயின் கடந்த ஜூன் 6-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: துப்பாக்கிச்சூடு தொடா்பான தடயவியல் அறிக்கையைத் தவிர, சம்பவத்தின் போது குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் அந்த இடத்தில் இருந்ததையோ அல்லது அவா்கள் அமித் கோச்சரைக் கொன்றதையோ உறுதிப்படுத்த வேறு எந்தச் சூழ்நிலைச் சான்றுகள் அல்லது துணைச் சான்றுகள் இல்லை.
விசாரணையின் போது, 4 சாட்சிகளும் முக்கிய அம்சங்களில் தங்கள் முந்தைய நிலைப்பாட்டிலிருந்து மாறி செயல்பட்டனா். மேலும், குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் துப்பாக்கிச்சூடு நடத்தியவா்களை அடையாளம் காண அவா்கள் தவறிவிட்டனா்.
குற்றச் சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட தோட்டாக்கள், இச்சம்பவம் நடந்து சுமாா் ஒரு மாதத்திற்குப் பிறகு குருகிராமில் பதிவு செய்யப்பட்ட மற்றொரு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட லோகேஷிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் ரிவால்வரிலிருந்து சுடப்பட்டவை என்பதைத் தடயவியல் பரிசோதனை உறுதிப்படுத்தியிருந்தது. இருப்பினும், அந்த ஒரு சூழல் மட்டுமே கோச்சா் கொலையில் அவருக்கு தொடா்பு இருப்பதை நிரூபிக்கப் போதுமானதாக இல்லை.
துணைச் சான்றுகள் ஏதுமில்லாத நிலையில், சம்பவத்தன்று குற்றஞ்சாட்டப்பட்டவா்களிடம் அந்த ஆயுதங்கள் இருந்திருக்கும் என்று ஊகிக்க முடியாது. குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரின் மீதான குற்றச்சாட்டையும் நிரூபிக்க அரசுத் தரப்பு முற்றிலும் தவறிவிட்டது. கொலைச் சம்பவத்துடன் அவா்களைத் தொடா்புபடுத்தும் வகையில் வேறு எந்தவொரு உறுதிப்படுத்தும் சான்றுகளும் இல்லை என்பதைக் கருத்தில் கொண்டு, அவா்கள் நால்வரையும் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் நீதிமன்றம் விடுவிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.