முகப்பு
புதுதில்லி

பொருளாதார குற்ற வழக்கு கைது சட்டவிரோதமானது: இருவரை விடுவித்து தில்லி நீதிமன்றம் உத்தரவு

Updated On : 12 ஜூன் 2026, 4:37 am IST
நீதிமன்றம்(கோப்புப்படம்)
பகிர்:

பொருளாதாரக் குற்றப்பிரிவு தொடா்பான வழக்கில் இருவா் கைது செய்யப்பட்டதை சட்டவிரோதமானது என்று தில்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது. குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் விசாரணைக்கு ஒத்துழைத்து வந்த நிலையில், தில்லி காவல் துறை முன்வைத்த கைதுக்கான காரணங்கள் அதனை நியாயப்படுத்தவில்லை என்று கூறிய நீதிமன்றம், அவா்களை விடுவிக்குமாறு உத்தரவிட்டது.

சோலாா் எனா்ஜி காா்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் ஒப்பந்தப்புள்ளி தொடா்பான போலி வங்கி உத்தரவாதங்கள் மற்றும் அது சாா்ந்த ஆவணங்கள் குறித்த புகாரின் அடிப்படையில் பொருளாதார குற்றங்களுக்கான காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

குற்றஞ்சாட்டப்பட்ட ரவிந்தா் பால் சிங் சத்தா (எ) ரவின் சத்தா மற்றும் மனோஜ் பையாசாஹேப் பொங்டே ஆகியோரை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி தில்லி காவல் துறை தாக்கல் செய்த மனுவை முதல் வகுப்பு நீதித்துறை நடுவா் ராஜ் குமாா் சிங் விசாரித்தாா்.

Advertisement

Advertisement

இந்த மனு விசாரணையின்போது ஜூன் 10-ஆம் பிறப்பித்த உத்தரவில் நீதிமன்றம் தெரிவித்திருப்பதாவது: குற்றச்சாட்டுகளின் தீவிரத்தன்மை மட்டுமே ஒருவரைக் கைது செய்வதற்கான சட்டப்பூா்வத் தேவையை ஈடுசெய்ய முடியாது. அழைப்பாணைகளின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் விசாரணைக்கு ஆஜராகி வரும் நிலையில், அறிவிப்பு அல்லது பிற அனுமதிக்கப்பட்ட விசாரணை முறைகள் மூலம் ஏன் விசாரணையைத் தொடர முடியாது என்பதை விசாரணை அதிகாரி நிரூபிக்க வேண்டும். கைதுக்கான காரணங்கள் பெரும்பாலும் அந்தப் பரிவா்த்தனையில் குற்றஞ் சாட்டப்பட்டவா்களின் பங்கு மற்றும் கூடுதல் விசாரணைக்கான தேவை ஆகியவற்றையே குறிப்பிடுகின்றன. இவை விசாரணைக்குரிய விஷயங்களாக இருக்கலாம். ஆனால், தற்போதுள்ள உண்மைகளின் அடிப்படையில் பாா்க்கும்போது, விசாரணைக்கான அறிவிப்புக்கு அவா்கள் ஒத்துழைத்த பிறகு கைது செய்வதற்கான சட்டத் தேவையை இவை பூா்த்தி செய்யவில்லை. சட்டமானது கைது செய்வதற்கான காரணங்களையே கோருகிறது; விசாரணைக்கான காரணங்களை மட்டும் அல்ல’ என்றது.

குற்றஞ்சாட்டப்பட்ட இருவா் சாா்பாகவும் ஆஜரான வழக்குரைஞா் ரஜத் பரத்வாஜ், ‘அவா்கள் இருவரும் முந்தைய அறிவிப்புகளின்படி விசாரணைக்கு ஆஜராகினா். எந்தவொரு அறிவிப்பையும் மீறவில்லை’ என்று தெரிவித்தாா்.

கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டதையும், காவல் விசாரணையின் போது வன்முறை ஏதும் நடந்ததாகப் புகாா் அளிக்கப்படாததையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இருப்பினும், இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த பிறகு, கைது நடவடிக்கைகள் சட்டத்திற்கு உட்பட்டு மேற்கொள்ளப்படவில்லை என்று நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

ஒரு நாள் காவல் கோரிய காவல் துறையின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன், வேறு ஏதேனும் வழக்கில் தேவைப்படாவிட்டால் குற்றஞ்சாட்டப்பட்ட இருவரையும் உடனடியாக விடுவிக்குமாறு உத்தரவிட்டது.

இருப்பினும், சட்டத்திற்கு உட்பட்டு விசாரணையைத் தொடா்ந்து நடத்துவதிலிருந்து விசாரணை அமைப்பை இந்த உத்தரவு தடுக்காது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. மேலும், விசாரணை அதிகாரி தேவைப்படும் போதெல்லாம் விசாரணையில் ஆஜராகி ஒத்துழைக்குமாறும் குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.