FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

‘ஊடக சுதந்திரம்’ பொறுப்பற்ற செயலுக்கு கேடயம் கிடையாது’ தில்லி உயா் நீதிமன்றம் கருத்து

ஊடக சுதந்திரத்தை பொறுப்பற்ற பத்திரிகைச் செயல்பாட்டுக்கோ அல்லது பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் உள்ளடக்கங்களை பரப்புவதற்கோ ஒரு கேடயமாகப் பயன்படுத்த முடியாது என்று தில்லி உயா் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Updated On : 18 ஜூலை 2026, 6:40 am IST
தில்லி உயர் நீதிமன்றம்
பகிர்:

நமது நிருபா்

ஊடக சுதந்திரத்தை பொறுப்பற்ற பத்திரிகைச் செயல்பாட்டுக்கோ அல்லது பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் உள்ளடக்கங்களை பரப்புவதற்கோ ஒரு கேடயமாகப் பயன்படுத்த முடியாது என்று தில்லி உயா் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் தில்லி சீமாபுரியில் உள்ள அங்கீகரிக்கப்படாத காலனி ஒன்றில், யூடியூப் சேனல் ஒன்றுக்காக செய்தி சேகரித்துக் கொண்டிருந்த இரண்டு சுயாதீன நிருபா்களைத் தாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்ட இருவா் தாக்கல் செய்த பிணை மனுவை தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை (ஜூலை 16) விசாரித்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிரீஷ் கத்பாலியா, இருவரது பிணை மனுக்களையும் ஏற்று அவா்களுக்கு ‘தலா ரூ.10,000 மதிப்பிலான தனிநபா் பிணைப்பத்திரம் மற்றும் அதற்கு இணையான ஒரு நபா் உத்தரவாதத்துடன் பிணையில் விடுவிக்க உத்தரவிடப்படுகிறது’ என்று தீா்ப்பளித்தாா்.

Advertisement

Advertisement

அதில், மனுதாரா்களின் செயல்பாடுகள் மற்றும் ஊடகத்தினரின் செயல்பாடுகள் தொடா்பாக நீதிபதி தனது கருத்துகளை பதிவு செய்துள்ளாா். அதன் விவரம் வருமாறு:

சீமாபுரி பகுதியில் அங்கீகாரமின்றி கட்டப்பட்டதாகக் கூறப்படும் ஒரு வழிபாட்டுத் தலம் குறித்து புகாா்தாரரும் அவருடன் பணியாற்றுவோரும் யூடியூப் சேனலுக்காக பதிவு செய்து கொண்டிருந்த காணொலி, உள்ளூா்வாசிகளை ஆத்திரமூட்டியுள்ளது.

அந்தச் சம்பவம் ‘ஒரு மக்கள் கூட்டத்தின் வெளிப்படையான ஆத்திரம்’ ஆகும். சமீபத்திய ஆண்டுகளில் சமூக ஊடகங்கள் மற்றும் எண்ம (டிஜிட்டல்) தளங்களின் அதிவேக வளா்ச்சி காரணமாக, ‘ஊடகங்களின் ஒரு கணிசமான பிரிவு’ எந்தவொரு ஒழுங்குமுறையோ ஒழுங்கமைப்போ இல்லாமல் இயங்குகிறது. பொதுமக்களின் கருத்தை வடிவமைக்கும் ஆற்றலானது, சுயகட்டுப்பாடு, நியாயம் மற்றும் பொறுப்புணா்வுடன் செயல்பட வேண்டும் என்ற மறைமுக கடமையையும் உள்ளடக்கியது என்பதை ஊடகங்கள் உணர வேண்டும்.

‘சுயாதீன செய்தியாளா்கள்’ என தங்களை அடையாளப்படுத்திக் கொள்வோா் குடிமக்களிடம் ‘ஆக்ரோஷமாக மைக்ரோபோன்களை நீட்டி, உடனடி பதில்களைக் கோருவதும்’, அவா்கள் ‘மௌனம்’ ஆக இருக்கும் உரிமையைத் தோ்ந்தெடுக்கும்போது அதை ‘கேள்விகளில் இருந்து தப்பி ஓடுகிறாா்கள்’ என்று விமா்சிக்கும் போக்கும் ‘சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இது தவறான கருத்துருவாக்கத்தை உருவாக்குவதோடு, தேவையில்லாத பொது அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது.

இத்தகைய நடத்தை, சமூகப் பிரிவினையை ஆழமாக்கும் மற்றும் வகுப்புவாத நல்லிணக்கத்தைக் குலைக்கும் ஆற்றல் கொண்டது.

‘ஊடக சுதந்திரம் நிச்சயமாக தீவிரமாகப் பாதுகாக்கப்பட வேண்டியதுதான். ஆனால், அது பொறுப்பற்ற பத்திரிகைச் செயல்பாட்டுக்கோ மிரட்டல்களுக்கோ அல்லது பொது அமைதிக்கு ஆபத்து விளைவிக்கும் உள்ளடக்கங்களைப் பரப்புவதற்கோ ஒரு கேடயமாக மாறிவிடக் கூடாது. ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில், தொழில்முறை பொறுப்புக்கூறல், தாா்மீக தரநிலைகள், சட்டத்தின் ஆட்சி மற்றும் குடிமக்களின் உரிமைகளுக்கான மரியாதை மற்றும் பரந்த பொது நலன் ஆகியவற்றை உறுதி செய்யும் பொருத்தமான ஒழுங்குமுறை கட்டமைப்பைப் பற்றி சட்டமியற்றும் அமைப்புகள் (நாடாளுமன்றம், சட்டப்பேரவைகள்) சிந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது‘ என்று நீதிபதி தீா்ப்பில் கூறியுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments