முகப்பு
தினமணி கதிர்

வாடா... கருப்பா...!

அண்ணாசாமி... பேருதான், அண்ணாசாமி. மத்தவங்க வாயில, அப்பாவிசாமின்னுதான் வரும். அவ்வளவு அப்பாவி மனிதர். அக்மார்க் அப்பாவி.

Updated On : 21 ஜூன் 2026, 4:05 am IST
பகிர்:

அண்ணாசாமி... பேருதான், அண்ணாசாமி. மத்தவங்க வாயில, அப்பாவிசாமின்னுதான் வரும். அவ்வளவு அப்பாவி மனிதர். அக்மார்க் அப்பாவி.

காலை எட்டு மணிக்கு ஒரு பையுடன் ஆபிசுக்குப் போகும்போது அவரை வெளியில் பார்க்கலாம். மாலை, ஆறு மணிக்கு அதே பையில் காய்கறிகளை துருத்திக் கொண்டு ஒரு கையில் வேர்க்கடலை கொறித்துக் கொண்டு வரும்போது பார்க்கலாம். மீதி நேரத்தில் மனிதரை வெளியே பார்க்க முடியாது. அக்கம்

பக்கம் யாரிடமும் மூச்சு விடமாட்டார்.

Advertisement

Advertisement

'ஹலோ...'

புன்சிரிப்புதான் பதில்.

'எப்படி சார் இருக்கீங்க?'

அதே புன்சிரிப்பு. யாராவது கோபித்துக் கொண்டாலும் புன்சிரிப்பு தான்.

அவருக்கு ஒரே நண்பன், கருப்புதான். வேலைக்குப் போகும் போது அவர் கூடவே வாலாட்டிக் கொண்டு தெருமுனை வரைக்கும் போவான். அவர் போடும் பிஸ்கட்டை சாப்பிட்டு அவரை பஸ் ஏற்றிவிட்டு, அங்கே இங்கே என்று சுற்றுவான்.

மாலை ஆறுமணிக்கு அவர் வருகிற வரையில் வழிமீது விழிவைத்துக் காத்திருப்பான். மனுஷன் இறங்கியதும் மறுபடியும் அதே அஞ்சு ரூபா பிஸ்கட்டை வாங்கி வீசுவார். சட்டென்று வாயில் கவ்விக்கொண்டு வாலை ஆட்டிக் கொண்டு கம்பீரமாய் வீடு வரை கொண்டு வந்து அவரை சேர்ப்பான்.

'டேய் கருப்பா...!' என்று செல்லமாக அவர் அழைப்பதே தனி அழகுதான். பதிலுக்கு அவன் வாலாட்டுவான். மகிழ்ச்சியில் துள்ளிக் கூத்தாடுவான். முன்னங்கால்களை தூக்கி சர்க்கஸ் காட்டுவான். பேசும் சக்தி இருந்தால் அவனும்கூட 'டேய் அண்ணாசாமி..!' என்று அழைப்பான்.

அண்ணாசாமிக்கும், கருப்பனுக்கும் அப்படியோர் அன்னியோன்யம், அப்படி ஒரு நட்பு. அவங்க நட்புக்கு முக்கியமான காரணம், அவங்க ஒருத்தரை ஒருத்தர் காப்பாத்திக்குறது தான்.

தெருவில் அண்ணாசாமியும் கருப்பனும் சென்றால், மற்ற நாய்கள் கருப்பன் கிட்ட நெருங்காதுங்க. பயந்துபோய், தூரமா நின்னு ஒப்புக்குக் குரைக்கும். கருப்பனும், ராணுவ வீரன் மாதிரி கம்பீரமாக நடப்பான், பக்கத்தில் அண்ணாசாமி இருக்கும் தைரியம்.

பதிலுக்கு, கருப்பன் தனது உயிரை பணயம் வைத்து செய்யும் தியாகம் மகத்தானது. யாரும் அறியாதது.

வீட்டில், அண்ணாசாமி சாப்பிட உட்கார்ந்தால் அவரைக் காப்பாற்றுவது இந்தக் கருப்பன் தான்.

அண்ணாசாமி மனைவி வைக்கும் சாம்பாரை வாயில் வைக்கமுடியாதுதான். சாம்பார் மட்டும் இல்லை. அம்மையார் சமையலே அப்படித்தான்.

ஒரு நாள் காரம் மூளையைத் தாக்கும். அடுத்த நாள் உப்பு இதயத்தைச் சுட்டு கரிக்கும்.

'என்னமா இப்படி காரம்?' என்று அண்ணாசாமி மெல்ல கேட்பார்.

'ஐயையோ... உங்கம்மா சத்தியமா ஒரு மிளகாய் தான் போட்டேங்க' பதிலுக்கு மாமியார் மீது சத்தியம் செய்வாள். இதற்கென்றே மாமியார் படத்தை கையில் தயாராய் வைத்திருப்பாள். பொய் சத்தியம் செய்தே நிஜ மாமியாரை சீக்கிரம் அனுப்பிவிட்டவள் என்ற பெயர் உண்டு.

ஒரு நாள் சம்பார் தண்ணியா இருக்கும். 'என்னம்மா சாம்பார்ல பருப்பையே காணோம்?' என்று கேட்டால், 'என்னங்க நீங்க... உங்க அம்மா சத்தியமா ரெண்டு ஆழாக்கு பருப்பு போட்டேன்.' என்பாள். அவ்வளவுதான் கதை முடிந்து விட்டது. கையில் அம்மா போட்டோ தயார்.

சமையல் தான் இப்படி என்றால் சாப்பாடு போடுவதும் அப்படித்தான். அளவே தெரியாது.

தட்டு நிறைய சாதத்தைக் கொட்டுவாள். குளம் போல சாம்பாரை ஊற்றுவாள்.

மனசுக்குள்ளேயே அண்ணாசாமி அலறுவார். அடுத்து ரசம் வேற மிரட்டும். தட்டு சாம்பாரையும் அதில் தத்தளிக்கும் சாதத்தையும் பார்த்து அண்ணா சாமி கண்கள் கண்ணீர் சொரியும். மூளை கதறும். வேறு வழி இல்லை சாப்பிட்டுதான் ஆகணும்.

அந்த நேரத்தில் தான் ஆபத்தாண்டவனாக அநாதை ரட்சகனாக கருப்பன் வந்து நிற்பான். 'கீச்சு.... கீச்சு'

ரகசியமாய் பாசக்குரல் கொடுப்பான் .

அப்பாடி...

அண்ணாசாமி துக்க கண்ணீர் இப்ப ஆனந்த கண்ணீராக மாறி தாராளமாய் மூக்கு வழியே ஒழுகும். 'உன்னை போல யாரு மச்சான்' என்று நண்பனைப் பார்த்து மனசுக்குள் பாடுவார்.

ரசம் எடுத்தவர, மனைவி உள்ளே செல்லும் இடைநேரத்தில் ஒரே தாவல், அனுமான் சமுத்திரத்தைத் தாண்டியது போல அண்ணாசாமி வாசலைதாண்டி சாப்பாட்டை கொட்டி விட்டு வந்து உத்தம புருஷனாய் உட்கார்ந்து விடுவார்.

ரசத்துடன் வரும் மனைவி புருஷன் தட்டை பார்ப்பாள்.

'அட தட்டுல சாதமே இல்லையே நம்ம சமையல் சூப்பரா இருக்குது' என்ற நினைப்பில், 'கொஞ்சம் சாதம் போட்டு சாம்பார் ஊத்திக்கிறீங்களா?' என்று பாசத்தை பாயசமாய் காட்டுவாள். அவ்வளவுதான்.

'ஐயோ...போதும்... போதும்' என அண்ணாசாமி அலறுவார். இதற்குள் கருப்பன் சாதத்தை தின்றுமுடித்து விடுவான். இப்படித்தான், அவன் அவரைக் காப்பாற்றி வருகிறான்.

பாவம்...

இந்தப் பாசத்துக்கும் ஒருநாள் ஆபத்து வந்து விட்டது.

கருப்பனுக்கு ஒரு பழக்கம். தெருவில் யாராவது வேகமா ஓடினால், வேகமாக மோட்டார் பைக் ஓட்டினால் அவனுக்குப் பொறுக்காது. வேகம் விவேகம் இல்லை. சட்டென்று கோபம் வந்துவிடும். குரைத்துக் கொண்டே பின்னால் துரத்துவான்.

சிலர் வண்டியை நேராக ஓட்ட மாட்டார்கள். வளைத்து வளைத்து ஸ்டைலாக ஓட்டுவார்கள். அவர்களையும் ஒரு கை பார்த்து விடுவான். கடிப்பது போல பாய்ந்து துரத்துவான். அண்ணாசாமி சாப்பிடும்போது ரோட்டில் யாரும் போகக்கூடாது. சும்மாவே குரைப்பான்.

ஒரு நாள் வெளியில் எதோ கசமுசா சத்தம்.

அண்ணாசாமி வெளியில் வந்தார். வீட்டுக்கு வெளியே நான்கைந்து இளைஞர்கள் முறைத்துக்கொண்டிருந்தார்கள்.

'நாங்க இளைஞர் நற்பணி மன்றத்தைச் சேர்ந்தவங்க. உங்க நாய் வரவங்க போறவங்களே சும்மாவே துரத்துது. போனவாரம் கூட ஒருத்தரை கடிக்கப் பார்த்திருக்கு. இனிமே அந்த நாயை வீட்டில் சேர்க்கக் கூடாது. சோறு போடக்கூடாது. நாய் கடிச்சு யாருக்காவது ரேபிஸ் வந்து அவங்க யாரையாவது கடிச்சி ஏதாவது அசம்பாவிதம் ஆயிட்டா... நீங்க தான் பொறுப்பு. மரியாதையா நாயைத் துரத்திடுங்க. இல்ல நடக்கறதே வேற...' என்று மிரட்டினார்கள். அவர் கண் எதிர்லேயே ஒருவன் கருப்பனை கல்லால் அடித்தான்.

பாவம்...

'கீச்... கீச்...' என்று கத்திக்கொண்டே ஓடினான் கருப்பன்.

பார்த்தார் அண்ணாசாமி. நமக்கேன் வம்பு என்று பயந்து போனவர், அன்னிக்கே கருப்பனை கை கழுவி விட்டார். அதைப் பார்க்கறது கிடையாது. அது கிட்ட பேசறது கிடையாது. அதுகிட்டபோறது கிடையாது. அதைக் கொஞ்சுறது கிடையாது. சுத்தமா அதைத் தள்ளி வச்சிட்டாரு.

அன்னிலேயிருந்து கருப்பனுக்கு பிஸ்கட் கிடையாது. முக்கியமா சாம்பார் சாதம் கிடையாது.

ஆறு அறிவு மனிதர் மறந்து விட்டார். ஐந்தறிவு கருப்பனால் அவரை மறக்க முடியவில்லை. இவரைப் பார்த்தாலேயே பின்னாடி ஓடி வருவான்.

இவர், அவன் பக்கம் திரும்பவே மாட்டார். பார்த்தால் மனசு கஷ்டப்படும் என்ற பயம்.

நாய் பிரச்னை, வீட்டு பிரச்னை இல்லை, தேசிய பிரச்னை என்று உச்சு கொட்டிக் கொள்வார். உச்ச நீதிமன்றத்தில் கதவை தட்டும் பிரச்னைக்கு, நாம் என்ன செய்யமுடியும்? என்று தனக்குத்தானே சமாதானம் செய்து கொள்வார். இரவில் சாப்பிடும் போதெல்லாம் கருப்பன் வெளியில் உட்கார்ந்து இருப்பான்.

'உர்... உர்' என்று பலவீனமாகக் குரல் கொடுப்பான்.

அதை அவரால் சகிக்க முடியாது எழுந்து போய் 'ஏய், போ... போ...' என்று துரத்துவார். அவன் போகமாட்டான். கெஞ்சுவான், வாலாட்டி கொஞ்சுவான். பார்க்கவே பரிதாபமா இருக்கும்.

'சொன்னாபோக மாட்டே...' கோபத்தில் கல் எடுத்து வீசுவார். 'லொள்...லொள்...' அடிப்பட்டதும் கருப்பன் குரைத்துக் கொண்டே ஓடுவான். கொஞ்சதூரம்தான். ஓடிப்போய் நின்று இவரை திரும்பப் பார்த்து மறுபடியும் திரும்பிவந்து வாலாட்டுவான்.

இவருக்கு தர்ம சங்கடமாக இருக்கும். இயலாமை மனசை உறுத்தும். வேறு வழியில்லாமல் ஒரு தடியை எடுத்து கருப்பனை துரத்திக் கொண்டு ஓடுவார்.

கருப்பன் ஓடுவதும் இவர் துரத்துவதும் தெருவுக்கே வேடிக்கையா இருக்கும். வேடிக்கை என்னவென்றால் அடிபடுதோ இல்லையோ கருப்பன் பின்னங்காலை தூக்கிக்கொண்டு 'கியாங்...கியாங்' என்று கத்திக்கொண்டு ஓடும். நாய்கள் பழக்கமே அப்படிதானாம். மறுபடியும் மறுநாள் வந்து நிற்கும்.

அப்படியும் இப்படியுமாய் சில நாள்கள் ஓடின.

கருப்பன் ஓடி வருவது, அண்ணாசாமி அவனைத் துரத்துவது தெருவில் வாடிக்கையாகி விட்டது. தீனி இல்லாததால் கருப்பன் நடக்கவே தள்ளாடியது. வயிறு ஒட்டிப்போய் விலாஎலும்பு தூக்கி, வால் மெலிந்து போயிருந்தது. பார்க்கவே பரிதாபமாய் இருந்தது. தோல் கூட வறண்டுப் போய்விட்டது.

அண்ணாசாமி மனம் கசிந்தார். நாம் என்ன செய்ய முடியும் என்று நினைத்துக் கொண்டார்.

வேகவேகமாய் ஓடும் இன்றைய சமுதாயத்துக்கு, கருணை, இரக்கம் பரஸ்பரம், பாசம் எதுவுமே புரியாது என்று சொல்லிக் கொள்வார்.

அன்று சனிக்கிழமை.

அண்ணாசாமி இட்லி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். எப்பவும் போல இட்லியை வாயில் வைக்க முடியவில்லை. சாம்பார் வாந்தி வந்தது.

'இந்நேரம் கருப்பு இருந்தால் அவர் வீட்டில் இருந்தபடி இட்லியைத் தூக்கிப் போடுவார். கருப்பன் தெருவில் இருந்தபடி லபக்...லபக் என்று பிடித்துக் கொள்வான். இருந்த சந்தோஷம் எல்லாமே போயிடுச்சு' என்று அவர் வேதனைப்பட்டார்.

'சார்..சார்..!'

வெளியில் குரல் கேட்டது. இன்னிக்கு என்ன பிரச்னையோ? எச்சில் கையோடு வெளியில் வந்தார் அண்ணாசாமி. வெளியில் ஜீப் நின்றிருந்தது. ஜீப்பில் நான்கு பேர் அதிகாரிகள் போல இருந்தார்கள். தெருவாசிகளும் கூடிவிட்டார்கள்.

'என்ன சார்?' அண்ணாசாமி கேட்டார்.

'சார் இவர் தான் அண்ணாசாமி' என்றார் கூட்டத்தில் இருந்த ஒரு பெரியவர்.

'நீங்கதான் அண்ணாசாமியா? நீங்கதான் அந்த நாயை...' என்று இழுத்தார் ஜீப்பில் இருந்தவர்.

பாதி டிபனில் எழுந்து வந்த வெறுப்பு, ஒரு நாய்க்காக ஆளாளுக்கு கேள்வி கேட்கும் தெனாவட்டு, தெருவே தன்னை வேடிக்கை பார்க்கும் அவலம் அண்ணாசாமிக்கு பொத்துக்கிட்டு வந்தது. என்ன பேசுறோம்? ஏது பேசுறோம்? என்று தெரியாமல் ஆத்திரத்தில் பொங்கினார்.

'ஆமாங்க நான்தான் அண்ணாசாமி. நான்தான் நாய்க்கு சோறு போட்டேன். இப்ப நாயை வீட்ல சேர்க்கறது கிடையாது. சோறு போடுறது கிடையாது. வீட்டை விட்டு அடிச்சு துரத்திட்டேன். எனக்கும் நாய்க்கும் எந்தத் தொடர்பும் கிடையாது...போதுமா?' என்று பொரிந்து தள்ளினார்.

'பாத்தீங்களா சார்... அவர் வாயாலேயே அந்த வாயில்லா ஜீவனை அடிச்சேன்னு ஒத்துக்கிட்டாரு' போட்டுக் கொடுத்தார் பெரியவர்.

'சார்...! நாங்க ப்ளூ கிராஸ்ல இருந்து வர்ரோம். நீங்க ஒரு நாயை தினமும் கல்லால அடிச்சு துன்புறுத்துறீங்களாம். புகார் வந்திருக்கு. அதுதான் விசாரிக்க வந்திருக்கோம். உங்களைப் பார்த்தாலே அது மிரண்டு பயந்து ஓடுதாமே. வாயில்லா ஜீவனை ஏன் சார் இப்படி கொடுமைப் படுத்துறீங்க?' என்று அதிகாரி விசாரிக்க, அண்ணாசாமி தள்ளாடினார்.

அடச்சே... நாயை வளர்த்தா ஒருத்தன் தப்புன்றான். சரி வேணாமுன்னு துரத்தினா அடுத்தவன் தப்புன்றான். என்னதான் செய்றது... தள்ளாட்டம் மாறி மயக்கமே வந்தது அவருக்கு...

'சட்டம் ஒரு கழுதை. முன்னால் சென்றால் கடிக்கும்... பின்னால் போனால் உதைக்கும்'. ஓர் அறிஞர் சொன்னது அவர் நினைவுக்கு வந்தது.

அண்ணாசாமி சட்டென்று நிமிர்ந்தார், 'இல்ல சார்... நான் நாயை அடிக்கலை' என்று மறுத்தார்.

'இல்ல சார்... அவரு நாயை கல்லால அடிச்சு துரத்துறதைப் பார்த்திருக்கிறோம் சார்' என்றார் பெரியவர்.

அண்ணாசாமிக்கு தைரியம் வந்து விட்டது, 'அதெல்லாம் பொய்சார்... அப்படி அடிச்சு துரத்தியிருந்தா நாய் என்னைப் பார்த்தா பயப்படணும் இல்லையா... பயந்து ஓடணும் இல்லையா?' என்று கேட்டவர்...

'டேய் கருப்பா' என்று குரல் கொடுத்து விரலைச் சொடுக்கினார் .

அவ்வளவுதான்... எங்கேயோ கண்காணா

தூரத்தில் இருந்த கருப்பன் அவர் குரலுக்கு நாலு கால் பாய்ச்சலில் ஓடிவந்து எல்லோரையும் தாண்டி ஒரே தாவாக தாவி, அண்ணாசாமி கைகளில் தஞ்சம் அடைந்தான்.

சந்தோஷத்தில் அவர் கன்னத்தையும் கைகளையும் நக்கிக் கொடுத்தான். வாளை ஆட்டி ஆட்டி தன் சந்தோஷத்தைக் காட்டினான்.

அது மட்டுமல்ல 'லொள்...லொள்' என்று மற்றவர்களைக் குரைத்து தன் எஜமான் விசுவாசத்தை வெளிப்படுத்தினான். விட்டால் கடித்து விடுவான் போல இருந்தது.

அவ்வளவுதான்...

புகார் கொடுத்த பெரியவர் விழுந்து எழுந்து ஓடினார். ஜீப் அப்பவே கிளம்பி விட்டது.

தெருவைப் பார்த்து அண்ணாசாமி கத்தினார். 'ஆமான்யா கேட்டுக்குங்க... இது என் நாய் . நான் சோறு போடுவேன், திட்டுவேன், கோபம் வந்தால் அடிப்பேன். ஏன்னா, இது என் வீட்டு நாய். நான்தான் இதை வளர்க்கப் போறேன். என்ன செய்ய முடியுமோ செய்துகொள்ளுங்கள்...'

கேட்பதற்குத்தான் ஆட்கள் இல்லை. அப்பவே ஓடிவிட்டார்களே. சாம்பார் பிரச்னைக்கு நிரந்தர நண்பன் கிடைத்துவிட்டான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments