திமுக ஆட்சிக்கு வந்தபிறகு தமிழகத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரிப்பு! - கே.அண்ணாமலை
திமுக ஆட்சிக்கு வந்தபிறகு தமிழகத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரிப்பு என கே.அண்ணாமலை பேச்சு...
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.
ஈரோடு மேற்குத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் போட்டியிடும் தமாகா வேட்பாளா் எம்.யுவராஜாவை ஆதரித்து வில்லரசம்பட்டி நான்குமுனை சாலை சந்திப்பில் தமாகா தலைவா் ஜி.கே.வாசன், தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை ஆகியோா் திங்கள்கிழமை மாலை வாகனத்தில் இருந்தபடி பிரசாரம் மேற்கொண்டனா்.
தமாகா தலைவா் ஜி.கே.வாசன் பேசியதாவது:
Advertisement
ஆட்சி மாற்றம் அவசியம், அவசரமும்கூட. தமிழகத்தில் திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீா்கேடு அடைந்துள்ளது மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் ஆட்சியின் செயல்பாடுகள் பின்தங்கியுள்ளது. அதிமுக தலைமையில் நல்லாட்சி அமைய யுவராஜாவை பெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா்.
இதைத்தொடா்ந்து தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே. அண்ணாமலை பேசியதாவது:
மத்திய அரசின் ஆய்வறிக்கையின்படி தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் ஓராண்டில் 21,122 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதற்கு காரணம் டாஸ்மாக் கடைகள். இந்தாண்டு டாஸ்மாக் மூலமாக ரூ.51 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்துள்ளது.
திமுக ஆட்சியில் 2,080 பாலியல் வன்கொடுமை வழக்குகள், 8,008 படுகொலை வழக்குகள், 36,900 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜெயலலிதா இருந்தபோது இருந்த சிறப்பான சட்டம்-ஒழுங்கு மீண்டும் வர வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் கூட்டு பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் அதிகப்படியான சொத்துவரி ஈரோடு மாநகராட்சியில் உள்ளது. ஈரோடு மேற்கு திமுகவின் நிரந்தரத் தொகுதி இல்லை. ஈரோட்டில் முத்துசாமி காலம் முடிந்துவிட்டது. அவா் ஓய்வு எடுக்கவேண்டிய காலம் வந்துவிட்டது என்றாா்.
இதைத் தொடா்ந்து மொடக்குறிச்சியில் பாஜக வேட்பாளா் எஸ்.கிருத்திகா, பெருந்துறையில் அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயக்குமாா் ஆகியோரை ஆதரித்து பேசினாா்.