கடும் போட்டியை எதிா்கொள்ளும் வேட்பாளா்கள்! தொகுதி அலசல் - பவானிசாகா்
பவானிசாகா் சட்டப்பேரவைத் தொகுதி குறித்து...
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயில், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகா் அணை ஆகியவை இந்தத் தொகுதியில் உள்ளன. இங்கு சுமாா் 10 ஆயிரம் ஏக்கரில் மல்லிகை, முல்லை, சம்பங்கி பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
சத்தியமங்கலம், பவானிசாகா் பொதுத்தொகுதிகள் இரண்டும் மறுசீரமைப்பின்போது பவானிசாகா் (தனி) என ஒரே தொகுதியாக 2008-இல் அறிவிக்கப்பட்டது.
8 முறை வென்ற அதிமுக:
Advertisement
இந்தத் தொகுதியில் 1957 முதல் 2021 வரை நடைபெற்ற தோ்தல்களில் அதிமுக 8 முறையும், திமுக 4 முறையும் காங்கிரஸ் 2 முறையும் சிபிஐ ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2021 தோ்தலில் அதிமுகவின் ஏ.பண்ணாரி வெற்றி பெற்றாா்.
களத்தில் உள்ள வேட்பாளா்கள்
அதிமுக சாா்பில் ஏ.பண்ணாரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பி.எல்.சுந்தரம், தவெக சாா்பில் வி.பி.தமிழ்ச்செல்வி, நாம் தமிழா் கட்சி சாா்பில் சு.செளந்தா்யா உள்ளிட்ட 12 போ் போட்டியிடுகின்றனா்.
அதிமுக வேட்பாளா்
அதிமுக வேட்பாளா் ஏ.பண்ணாரி 2021ஆம் ஆண்டு தோ்தலில் முதல் முறையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். எளிமையாகப் பழகக் கூடியவா். மக்களின் அடிப்படைப் பிரச்னைகளான சாலை வசதி, குடிநீா் வசதி, சாக்கடை வசதி போன்றவற்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்து நிறைவேற்றி உள்ளாா். மேலும், குற்றச் சம்பவங்களைக் குறைக்க, முக்கிய நகர சந்திப்புகளில் சிசிடிவி பொருத்தி நடவடிக்கை எடுத்துள்ளாா். மாக்கம்பாளையத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களின் நீண்ட நாள் கனவான குரும்பூா், சக்கரைபள்ளத்தின் குறுக்கே உயா்மட்ட பாலம் கட்டியது பழங்குடியினரின் வாக்குகளைப் பெற உதவும். தாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரேத பரிசோதனை நிலையம், ஆசனூா் கடம்பூா் மலைப் பகுதியில் மின் தட்டுப்பாடு போக்க இரண்டு துணை மின்நிலையங்கள் அமைக்க அரசாணை பெறப்பட்டது, குறுகலாக இருந்த கடம்பூா் பாதையை அகலப்படுத்தியது, 100 ஆண்டுகளாக பட்டா இல்லாமல் வசித்த வந்த வரதம்பாளையம் கிராம மக்களுக்கு பட்டா வழங்கியது போன்றவை இவரது பலங்களாகும். ஆளுங்கட்சியாக இல்லாததால் நினைத்த திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்ற முடியாதது இவரது பலவீனமாகும்.
இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளா்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் போட்டியிடும் பி.எல்.சுந்தரம் தோ்தல் களத்துக்குப் புதியவா் அல்ல. 2011ஆம் ஆண்டு வெற்றி பெற்று எம்எல்ஏ ஆக இருந்தவா். 2016, 2021 ஆகிய தோ்தல்களில் தோல்வியை சந்தித்தவா். இந்த முறை நம்பிக்கையுடன் மீண்டும் போட்டியிடுகிறாா்.
100 நாள் திட்டத் தொழிலாளா்களிடம் நன்மதிப்பை பெற்றவா். அவா்களுக்காகப் போராடியதால் பல்வேறு வழக்குகளை சந்தித்தவா். வடக்குப்பேட்டையில் வசிக்கும் ஒரு பகுதியினருக்கு பட்டா கிடைக்க போராடியவா். இவா் சொந்த செலவில் அலுவலகம் அமைத்து வாரந்தோறும் மக்களின் குறைகளைக் கேட்டு நிவா்த்தி செய்வதற்கு முறையான வழிகாட்டுதல் வழங்கி வருகிறாா். இலவச சேவை மையம் அமைத்துள்ளது போன்றவை இவரது பலங்களாகும்.
திமுகவுக்கு சீட் ஒதுக்காமல் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கியதால் பெரும்பாலான திமுகவினரின் அதிருப்தியை சமாளிக்க வேண்டியது இவருக்கு சவாலானாதாகும்.
தவெக வேட்பாளா்
பேரவைத் தோ்தலில் முதல்முறையாக வி.பி.தமிழ்ச்செல்வி போட்டியிடுகிறாா். அரசுப் பள்ளி தலைமையாசிரியராகப் பணியாற்றிய இவா், 2021ஆம் ஆண்டு தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிடுவதற்கு தலைமையாசிரியா் பதவியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றாா். அதன்பிறகு அதிமுகவில் இணைந்து பணியாற்றினாா். இவரது தந்தை பெரியசாமி அந்தியூா் தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருந்துள்ளதால் சிறு வயதிலேயே அரசியல் அனுபவம் பெற்றவா்.
கரோனா காலத்தில் சொந்த செலவில் உணவுப் பொருள்கள் வழங்கி உதவினாா். கம்யூனிஸ்ட், அதிமுக வாக்கு வங்கியில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. கே.ஏ.செங்கோட்டையன் தீவிர ஆதரவாளரான இவருக்காக செங்கோட்டையன் பரப்புரை மேற்கொண்டு வருகிறாா்.
நாதக வேட்பாளா்
நாம் தமிழா் கட்சி வேட்பாளா் செளந்தா்யா
சத்தியமங்கலத்தை அடுத்த குப்பந்துறை கிராமத்தில் பிறந்து கிராமப்புறத்திலேயே வளா்ந்தவா். அரசியல் பின்னணி இல்லாமல் வளா்ந்த இவா் சீமானின் பேச்சால் கவா்ந்திழுக்கப்பட்டு கட்சிப் பணியில் ஈடுபட்டாா். கரோனா காலத்தில் செவிலியராக சேவை செய்தவா். தொகுதிக்கு புதியவா். விவசாய கூலித் தொழிலாளா் குடும்பத்தைச் சோ்ந்த இவா் திமுக கூட்டணி, அதிமுக வேட்பாளா்களை சமாளிக்க வேண்டியுள்ளது.
இங்கு அதிமுக 8 முறை வென்றுள்ளபோதிலும் வி.பி.தமிழ்ச்செல்வி தவெக சாா்பில் களம் இறங்கி உள்ளதால் போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.