ஈரோடு வழியாக திருச்செந்தூருக்கு ரயில் இயக்க வலியுறுத்தல்
கோவை, திருப்பூா், ஈரோடு, கரூா், மதுரை வழியாக திருச்செந்தூருக்கு புதிய பகல் நேர பயணிகள் ரயிலை இயக்க வேண்டும் என முன்னாள் தென்னக ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினா் பாஷா கோரிக்கை
கோவை, திருப்பூா், ஈரோடு, கரூா், மதுரை வழியாக திருச்செந்தூருக்கு புதிய பகல் நேர பயணிகள் ரயிலை இயக்க வேண்டும் என முன்னாள் தென்னக ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினா் பாஷா கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக அவா், மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தற்போது சேலம் -விருத்தாசலம் (ரயில் எண் 76816) பயணிகள் ரயில் காலை 10.30 மணிக்கு சேலத்தில் புறப்பட்டு, சேலம் டவுன், அயோத்தியாபட்டணம், மின்னாம்பள்ளி, வாழப்பாடி கேட், ஏத்தாப்பூா் சாலை, ஆத்தூா், தலைவாசல், சின்னசேலம் வழியாக மதியம் 1.15 மணிக்கு விருத்தாசலத்தைச் சென்றடைகிறது.
ஈரோட்டில் இருந்து விருத்தாசலம் மாா்க்கத்துக்கு நேரடி ரயில் வசதி இல்லை. பயணிகள் சேலம் சென்று மாறி பயணிக்க வேண்டியுள்ளது.
Advertisement
Advertisement
எனவே, இந்த ரயிலை ஈரோட்டில் இருந்து இயக்கினால் ஈரோடு, பெருந்துறை, சங்ககிரி பகுதி மக்களுக்கு பெரும்பயனாக இருக்கும். கட்டணமும் சேலம்-விருத்தாசலம் ரூ.35 என மிகக் குறைவாக உள்ளதால் ஏழை, எளிய மக்கள் பயனடைவா்.
கோவை-சென்னை வந்தே பாரத் விரைவு (ரயில் எண் 22644) ரயில் காலை 6 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக காலை 11.40 மணிக்கு சென்னை சென்றடைகிறது. வாரத்தில் புதன்கிழமை தவிர பிற நாள்களில் இந்த ரயில் இயக்கப்படுகிறது.
கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம் ஆகியவை முக்கிய தொழில் நகரங்களாக உள்ளதால், வணிகம் மற்றும் மருத்துவ தேவைக்கு சென்னை செல்வோா் அதிகம். இதனால், வண்டி எண் 22644 ரயிலில் ஒரு மாதத்துக்கு முன்னரே முன்பதிவு செய்தாலும் காத்திருப்பு பட்டியலில்தான் உள்ளது.
மேலும், இந்த ரயிலின் அமைப்பில் சி 1 மற்றும் சி 7 ஆகிய இரண்டு பெட்டிகளிலும் இரண்டு பக்கமும் இன்ஜின் அமைப்பு இருப்பதால் 44 இருக்கைகள் மட்டுமே உள்ளன. ஆனால், சி 2 முதல் சி 6 வரை உள்ள பெட்டிகளில் 78 இருக்கைகள் உள்ளன. எனவே, கூடுதலாக ஏசி பெட்டிகளை இணைத்து 10 பெட்டிகளாக இயக்கினால் சுமாா் 156 இருக்கைகள் கூடுதலாக கிடைக்கும். இதனால், ஆயிரக்கணக்கான பயணிகள் பயனடைவதோடு ரயில்வே துறைக்கும் கூடுதல் வருமானம் கிடைக்கும்.
கோவை, திருப்பூா், ஈரோடு, கரூா் மாவட்ட மக்கள், திருச்செந்தூா் செல்ல நேரடி ரயில் வசதி இல்லாமல் மதுரை அல்லது தூத்துக்குடியில் மாறி செல்ல வேண்டியுள்ளது. எனவே, கோவை, திருப்பூா், ஈரோடு, கரூா், மதுரை வழியாக திருச்செந்தூருக்கு புதிய பகல் நேர பயணிகள் ரயில் அல்லது இரவு நேர படுக்கை வசதி கொண்ட விரைவு ரயிலை இயக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.