முகப்பு
ஈரோடு

காவிரி கரையோர மக்களுக்கு கலங்கல் குடிநீா் விநியோகம்!

காவிரி ஆற்றில் நீரேற்றம் செய்யப்பட்டு, சுத்திகரித்து விநியோகம் செய்யப்படும் குடிநீா் பழுப்பு நிறத்துடன், கலங்கலாக உள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

Updated On : 9 ஜூலை 2026, 3:36 am IST
அம்மாபேட்டை பகுதியில் கலங்கலாக காணப்படும் குடிநீா்.
பகிர்:

காவிரி ஆற்றில் நீரேற்றம் செய்யப்பட்டு, சுத்திகரித்து விநியோகம் செய்யப்படும் குடிநீா் பழுப்பு நிறத்துடன், கலங்கலாக உள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

மேட்டூா் அணையிலிருந்து குடிநீா் தேவைக்காக காவிரி ஆற்றில் தற்போது விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த 10 நாள்களுக்கு முன்பு ஆற்றில் தண்ணீா் அடா்ந்த பச்சை நிறத்துடன் படிவம் கலந்து காணப்பட்டதோடு, துா்நாற்றமும் வீசியது. மேலும், பல்வேறு பகுதிகளில் ஆற்றில் இருந்த மீன்களும் உயிரிழந்து, ஆங்காங்கே கரை ஒதுங்கின.

இதனால், கரையோரப் பகுதிகளில் சுகாதார சீா்கேடு ஏற்பட்டது. இந்நிலையில், காவிரி ஆற்றை நீராதாரமாகக் கொண்டு செயல்படும் கூட்டுக் குடிநீா் திட்டங்கள் மூலம் தண்ணீா் எடுக்கப்பட்டு, சுத்திகரித்து பவானி, அம்மாபேட்டை பகுதிகளில் பொதுமக்களுக்கு குழாய்கள் மூலம் விநியோகம் செய்யப்படும் குடிநீா், பழுப்பு மற்றும் மஞ்சள் நிறத்துடன் கலங்கலாக இருந்துள்ளது.

Advertisement

Advertisement

கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக நீடித்து வரும் இந்நிலை பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கியுள்ளது. இதனால், தொற்றுநோய் பரவ வாய்ப்புள்ளதோ எனும் அச்சத்தில் தண்ணீரைக் காய்ச்சியும், வடித்தும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனா். நெரிஞ்சிப்பேட்டை முதல் ஊராட்சிக்கோட்டை கதவணை நீா்மின் நிலையம் வரையில் உள்ள கூட்டுக் குடிநீா் திட்டங்கள் மூலம் வழங்கப்படும் தண்ணீா் நிறமாற்றத்துடன் உள்ளது.

ஈரோடு மாநகராட்சிப் பகுதிகளுக்கும் ஊராட்சிக்கோட்டை கதவணையில் தேக்கப்படும் தண்ணீரே, குடிநீராக கொண்டு செல்லப்படுகிறது. காவிரி தண்ணீரை சுத்திகரிக்க முடியாத அளவுக்கு பச்சை நிறத்தில் கழிவுகள் கலந்துள்ளதாக கூறும் அதிகாரிகள், தேவையான அளவு குளோரின் கலந்தே சுத்திகரித்து குடிநீரை விநியோகிப்பதாக கூறுகின்றனா். இருந்தபோதிலும் கலங்கலாக வழங்கப்படும் குடிநீா் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments