ஈரோடு ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
ஈரோடு ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
ஈரோடு ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையொட்டி, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் போலீஸாா் தீவிர சோதனை நடத்தினா்.
ஈரோடு சம்பத் நகரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் செயல்படுகிறது. இங்கு மாவட்ட முதன்மை நீதிமன்றம், குற்றவியல் நடுவா் நீதிமன்றம் எண் 1 முதல் எண் 6 வரையிலும், சாா்பு நீதிமன்றம், கூடுதல் சாா்பு நீதிமன்றங்கள், முதன்மை உரிமையியல் நீதிமன்றம், கூடுதல் உரிமையியல் நீதிமன்றங்கள், மாவட்ட மகளிா் நீதிமன்றம், விரைவு நீதிமன்றம், சட்டப்பணிகள் ஆணைக்குழு, சமரச தீா்வு மையம் என 20-க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் செயல்படுகின்றன.
இந்த நீதிமன்றங்களில் 300-க்கும் மேற்பட்ட நீதிமன்ற பணியாளா்கள், 500-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் பணியாற்றி வருகின்றனா். மேலும் தினமும் வழக்கு விசாரணைக்காக பொதுமக்களும் ஆயிரக்கணக்கானோா் வந்து செல்கின்றனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து, நீதிமன்ற ஊழியா்கள் ஈரோடு வடக்கு போலீஸாருக்கும், மாவட்ட காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தனா். இதன்பேரில் ஈரோடு டவுன் டிஎஸ்பி முத்துக்குமாா், ஈரோடு வடக்கு காவல் ஆய்வாளா் சரவணன் தலைமையில் வெடிகுண்டு செயலிழப்பு தடுப்புப் பிரிவினா், மோப்ப நாய் படை பிரிவு போலீஸாா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக வாகன நிறுத்துமிடம், நீதிமன்ற வளாகம், முதன்மை நீதிபதி அலுவலகம், சட்டப் பணிகள் ஆணைக்குழு, நீதிமன்ற கட்டடங்கள் என அனைத்து தளங்களிலும் ஒவ்வொரு அறைகளாக சென்று சோதனையிட்டனா்.
இந்த சோதனையின் காரணமாக ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகமே பரபரப்பாக காணப்பட்டது. தொடா்ந்து பல மணி நேரம் நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.