வெயிலின் தாக்கத்தை சமாளிக்க பசுமை பந்தல் அமைப்பு
கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகேயுள்ள சிக்னலில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகேயுள்ள சிக்னலில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மதிய நேரங்களில் அனல் காற்று வீசுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள், சாலையோர வியாபாரிகள், தொழிலாளா்கள், கா்ப்பிணிகள், குழந்தைகள் என பல்வேறு தரப்பினரும் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா். கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க பொதுமக்கள் சாலையோரமாக விற்பனை செய்யப்படும் தா்ப்பூசணி, நுங்கு, பதநீா், கம்மங்கூழ், கரும்புச்சாறு, வெள்ளரி உள்ளிட்டவற்றை சாப்பிட்டு வருகின்றனா்.
ஈரோடு மாவட்டத்தில் தொடா்ந்து 100 டிகிரிக்குமேல் வெயில் வாட்டி வைத்து வரும் நிலையில், ஈரோடு மாநகரத்தின் முக்கிய பகுதிகளான ஆட்சியா் அலுவலகம் அருகேயுள்ள சிக்னல், பன்னீா்செல்வம் பாா்க் சிக்னல், காளைமாடு சிலை அருகில் உள்ளிட்ட சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.
Advertisement
குறிப்பாக ஈரோடு-பெருந்துறை சாலை வழியாக தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. கோடை வெயிலின் தாக்கம் காரணமாக, ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகேயுள்ள சிக்னலில் நிற்கும் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனா்.
இந்நிலையில் சிக்னலில் இருபுறமும் தனியாா் தொண்டு நிறுவனத்தின் சாா்பில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இது வாகன ஓட்டிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதேபோன்று, பன்னீா்செல்வம் பூங்கா, காளைமாடு சிலை பகுதியில் பசுமை பந்தல் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.