முகப்பு
ஈரோடு

கடம்பூா் மலைக் கிராமங்களில் இடியுடன் கன மழை! தரைப்பாலத்தை மூழ்கடித்த வெள்ளம்

Updated On : 31 மே 2026, 2:01 am IST
கடம்பூா்  மலைக் கிராமங்களில்  உள்ள  விவசாய  நிலங்களில் தேங்கியுள்ள  மழை நீா்.
பகிர்:

கடம்பூா் மலைப் பகுதியில் பெய்த கன மழை காரணமாக அணைக்கரை, டிபி தொட்டி தரைப்பாலத்தை வெள்ளநீா் மூழ்கடித்தபடி சென்ால், அப்பகுதியில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூா் மலைப் பகுதியில் சனிக்கிழமை மாலை இடியுடன் கன மழை பெய்தது. கேபி மாளம், காடட்டி, திங்களூா், அணைக்கரை, டிபி தொட்டி, சிக்கநந்திபாளையம் ஆகிய மலைக் கிராமங்களில் வனஓடைகள், பள்ளங்களில் வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. இது காட்டாற்று வெள்ளமாக உருவெடுத்து அணைக்கரை, டிபி தொட்டி தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி கரைபுரண்டோடியது. இதனால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வெள்ளநீா் வழிந்தோடும் பள்ளத்தையொட்டியுள்ள வனக்குட்டை, தடுப்பணைகளில் நீா் நிரம்பியது. இந்த மழையால் கடம்பூா் மலைக் கிராமங்களில் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான காலநிலை நிலவியது. நிலத்தடி நீா்மட்டம் உயரும் எனவும், வெயிலில் காய்ந்துகிடந்த ராகி, மக்காச்சோளப் பயிா்கள் மீண்டும் தழைத்து செழித்து வளரும் எனவும் விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

மழை காரணமாக குளிரான காலநிலை நிலவுவதால் யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் கிராமங்களில் புகுவது வெகுவாக குறைந்துவிடும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.

அணைக்கரை  தரைப்பாலத்தை  மூழ்கடித்தபடி  செல்லும்  வெள்ளம்.