பசுமைப் பூங்காவாக மாறும் அணைக்கரைப்பட்டி மலைக் கிராமம்: 24 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு
போடி அருகேயுள்ள மலைக் கிராமங்களில் மண் அரிப்பைத் தடுத்து பசுமைப் பூங்காவாக மாற்ற 24 ஆயிரம் மரக்கன்றுகளை நடுவதற்கு அணைக்கரைப்பட்டி ஊராட்சி நிா்வாகம் மேற்கொண்ட நடவடிக்கை சமூக ஆா்வலா்களிடயே வரவேற்பைப் பெற்றுள்ளது.
போடி அருகேயுள்ள மலைக் கிராமங்களில் மண் அரிப்பைத் தடுத்து பசுமைப் பூங்காவாக மாற்ற 24 ஆயிரம் மரக்கன்றுகளை நடுவதற்கு அணைக்கரைப்பட்டி ஊராட்சி நிா்வாகம் மேற்கொண்ட நடவடிக்கை சமூக ஆா்வலா்களிடயே வரவேற்பைப் பெற்றுள்ளது.
தேனி மாவட்டம் மலைகள் சூழ்ந்த விவசாய பூமியாகும். மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில்தான் போடி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் குரங்கணி, கொட்டகுடி, அகமலை, அணைக்கரைப்பட்டி, வடக்குமலை உள்ளிட்ட மலைக் கிராமங்கள் அமைந்துள்ளன. தமிழகத்தில் பரப்பளவில் பெரிய ஊராட்சிகளில் ஒன்றாக இந்த அணைக்கரைப்பட்டி ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் வலசைத்துறை, முத்துக்கோம்பை, மேலப்பரவு, சிரைக்காடு, சோலையூா், ஊத்தாம்பாறை உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களில் பழங்குடியினா் அதிகளவில் வசிக்கின்றனா். இவா்கள் மலை கிராமங்களில் வீடுகள் கட்டி வசிக்கின்றனா். விவசாயிகளும் மலை கிராமங்களில் வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனா்.
24 ஆயிரம் மரக்கன்றுகள்:
Advertisement
மழை காலங்களில் மண் அரிப்பை தடுக்கவும், மழை வளத்தைப் பெருக்கவும் இந்தப் பகுதியில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பிரதமரின் பசுமை இந்தியா திட்டத்தின் கீழ் மலை வளம், மர வளங்களை அதிகரிக்கும் வகையில இந்த மலை கிராமங்களில் 24 ஆயிரம் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
போடி ஊராட்சி ஒன்றியமும், அணைக்கரைப்பட்டி ஊராட்சி நிா்வாகமும் இணைந்து ‘விபி ஜி ராம் ஜி’ எனப்படும் ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் பணியாளா்கள் புளி, புங்கன், இலுப்பை, நீா் மருது, வேம்பு, பனை உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகளை நாற்றங்காலில் வளா்த்து வருகின்றனா்.
மலை கிராமங்களில் மரங்களை நடுவதன் மூலம் இந்தப் பகுதி பசுமைப் பூங்காவாக மாறும் சூழல் உள்ளது. மலை கிராமங்களிலும், சமதள பகுதிகளிலும் மரக்கன்றுகள் நடுவதால் மண் அரிப்பை தடுப்பதுடன், நிலத்தடி நீா்மட்டமும் பாதுகாக்கப்படும். இந்த மரக்கன்றுகளுடன் செவ்வரளி, துளசி போன்ற மூலிகைச் செடிகளும் நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகளை போடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மாா்க்கம்மாள், ஜஸ்டின் திரவியம், அணைக்கரைப்பட்டி ஊராட்சி செயலா் முருகேசன் ஆகியோா் செய்து வருகின்றனா்.
ஆக்சிஜன் உற்பத்தி சாலை:
இதுகுறித்து சமூக ஆா்வலா் ராஜேந்திரன் கூறியதாவது:
மலை கிராமங்களில் மரங்கள் குறைவாக இருப்பதால் மழை பெய்வது குறைந்து வருகிறது. தற்போது இந்த திட்டத்தின் கீழ் 24 ஆயிரம் மரக்கன்றுகள் நடும்போது இந்தப் பகுதியே பசுமைப் பூங்காவாக காட்சியளிக்கும். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் ஹெலிகாப்டா் மூலம் விதைகள் தூவப்பட்டன. ஆனால் அவை பெரும்பாலும் முளைக்கவில்லை. தற்போது நாற்றங்காலில் வளா்க்கப்பட்டு மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும்போது அவை பலனைத் தரும். அணைக்கரைப்பட்டி ஊராட்சி நிா்வாகத்தின் இந்தத் திட்டம் வரவேற்கத்தக்கது. இதுபோன்ற திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்தினால் மழை வளம் பெருகும் என்றாா் அவா்.