உதகை படகு இல்லத்தில் வாகன நிறுத்தக் கட்டணம் உயர்வு: 18% ஜிஎஸ்டி வரி விதிப்பு; சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி
உதகை படகு இல்லத்தில் வாகன நிறுத்தக் கட்டணம் உயர்த்தப்பட்டு, 18 % ஜிஎஸ்டி வரியும் சேர்த்து
உதகை படகு இல்லத்தில் வாகன நிறுத்தக் கட்டணம் உயர்த்தப்பட்டு, 18 % ஜிஎஸ்டி வரியும் சேர்த்து வசூலிக்கப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம், உதகையில் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, மரவியல் பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. உதகை வரும் சுற்றுலாப் பயணிகள் மேற்கண்ட சுற்றுலா தலங்களுக்குச் செல்லாமல் திரும்புவது இல்லை.
தாவரவியல் பூங்காவிற்கு நாள்தோறும் வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், பூங்கா பராமரிப்பு பணிகள் ஆகியவற்றை மேற்கொள்ள தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணம் போதுமானதாக இல்லை என்பதைக் காரணம் காட்டி கடந்த சில நாள்களுக்கு முன்பு நுழைவுக் கட்டணம் உயர்த்தப்பட்டது. மரவியல் பூங்காவிலும் நுழைவுக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, தற்போது வசூலிக்கப்பட்டு வருகிறது.
தாவரவியல் பூங்காவிற்கு அடுத்தபடியாக சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வரும் உதகை ஏரியில் அமைந்துள்ள படகு இல்லம் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கட்டுபாட்டில் உள்ளது. படகு இல்லத்தில் வாகனங்களை நிறுத்த கட்டணமாக, இரு சக்கர வாகனத்திற்கு ரூ. 10., காருக்கு ரூ. 30, வேன், பேருந்துக்கு தலா ரூ. 50 வீதம் வசூலிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், படகு இல்லத்தில் வாகன நிறுத்தக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இருசக்கர வாகனக் கட்டணத்தில் மாற்றம் இல்லை. அதேசமயம், காருக்கு ரூ. 50, வேனுக்கு ரூ. 75, பேருந்துக்கு ரூ.100 என கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட கட்டணத்துடன் 18 சதவீத ஜி.எஸ்.டி. வரியும் சேர்த்து வசூலிக்கப்படும் என படகு இல்ல வளாகத்தில் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஜி.எஸ்.டி.வரியுடன் சேர்த்து காருக்கு ரூ. 59, வேனுக்கு ரூ. 84, பேருந்துக்கு ரூ.118 வசூலிக்கப்படுகிறது. கட்டண உயர்வு சுற்றுலாப் பயணிகளை அதிருப்தியடையச் செய்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.