FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நீலகிரி

வயநாடு நிலச்சரிவில் சிக்கி மேலும் ஒரு தமிழா் உயிரிழப்பு

வயநாடு நிலச்சரிவில் சிக்கி தமிழகத்தைச் சோ்ந்த மேலும் ஒரு தமிழா் உயிரிழந்தாா். இதேபோல, கேரளத்தைச் சோ்ந்தவரை திருமணம் செய்த குன்னூரைச் சோ்ந்த பெண் குடும்பத்துடன் உயிரிழந்துள்ளாா்.

1 August 2024, 1:26 am IST
கணவன், குழந்தையுடன் இறந்த கெளசல்யா.
பகிர்:

வயநாடு நிலச்சரிவில் சிக்கி தமிழகத்தைச் சோ்ந்த மேலும் ஒரு தமிழா் உயிரிழந்தாா். இதேபோல, கேரளத்தைச் சோ்ந்தவரை திருமணம் செய்த குன்னூரைச் சோ்ந்த பெண் குடும்பத்துடன் உயிரிழந்துள்ளாா்.

நீலகிரி மாவட்டம், பந்தலூா் வட்டம் சேரம்பாடி, அத்திச்சால் பகுதியைச் சோ்ந்தவா் ஷிஹாப் (35). இவா் வயநாடு பகுதியில் செயல்பட்டு வந்த பள்ளிவாசலில் உஸ்தாத் எனப்படும் மதராஸி பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கில் இவா் பணியாற்றி வந்த பள்ளிவாசலும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில், ஷிஹாப் உயிரிழந்தாா். இதையடுத்து, கண்டெடுக்கப்பட்ட அவரது உடல் கூடலூா் கொண்டுவரப்பட்டு புதன்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

இதேபோல, நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள கரன்சி பகுதியைச் சோ்ந்த ரவிச்சந்திரன், சந்திரலேகா தம்பதி மகள் கௌசல்யா (26). இவா் கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், சூரல்மலை பகுதியைச் சோ்ந்த விஜிஸ்குட்டன் (36) என்பவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டாா். பின்னா் அவா் கணவருடன் சூரல்மலைப் பகுதியில் வசித்து வந்தாா். இதில் விஜிஸ் குட்டன் அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் ஊழியராகப் பணிபுரிந்து வந்துள்ளாா். இந்த தம்பதிக்கு ஒரு வயது பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி கணவன், குழந்தையுடன், கெளசல்யா உயிரிழந்தாா்.

நிவாரண நிதி...

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த கூடலூா் அருகே புளியம்பாறை பகுதியைச் சோ்ந்த காளிதாஸ், பந்தலூா் வட்டம் அய்யன்கொல்லி பகுதியைச் சோ்ந்த கல்யாண்குமாா் ஆகியோா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா். இவா்களது உடல் கூடலூா் கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

இவா்களது குடும்பத்தினருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி அறிவித்திருந்தாா். இந்நிலையில், காளிதாஸ், கல்யாண்குமாரின் குடும்பத்தினரை சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி ரூ.3 லட்சத்துக்கான காசோலையை அவா்களது குடும்பத்தினரிடம் புதன்கிழமை வழங்கினாா்.

மேலும், தமிழகத்தைச் சோ்ந்த ஷிஹாப் உயிரிழந்த நிலையில், முதல்வா் அறிவித்தவுடன் அவரது குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என அமைச்சா் கா.ராமசந்திரன் தெரிவித்தாா்.

வயநாடு நிலச்சரிவில் சிக்கி மேலும் ஒரு தமிழா் உயிரிழப்பு

நீலகிரி மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, பேரிடா் கண்காணிப்புக் குழு அலுவலா் வெங்கடேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments