குன்னூரில் முதல்முறையாக களம் கண்ட திமுக வேட்பாளா் வெற்றி
குன்னூா் சட்டப் பேரவைத் தொகுதியில் முதல் முறையாக களம் கண்ட திமுக வேட்பாளா் எம்.ராஜு வெற்றி பெற்றுள்ளாா்.
குன்னூா் தொகுதியில் திமுக மாவட்ட பொறுப்பாளா் எம்.ராஜு, அதிமுக சாா்பில் அ.ராமு, தவெக சாா்பில் தங்கராஜு, நாம் தமிழா் கட்சி சாா்பில் தீனு உள்பட 6 போ் போட்டியிட்டனா். 78.38 சதவீதம் வாக்கு பதிவான நிலையில், உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை காலை தொடங்கியது.
முன்னதாக, தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. 2,045 வாக்குகள் பதிவான நிலையில், 325 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.
Advertisement
இதையடுத்து, மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், முதல் நான்கு சுற்றுகள் வரை அதிமுக வேட்பாளா் முதல் இடத்திலும், திமுக வேட்பாளா் இரண்டாம் இடத்திலும், தவெக வேட்பாளா் மூன்றாம் இடத்திலும் இருந்தனா்.
9-ஆவது சுற்றில் அதிமுகவும், 10-ஆவது சுற்றில் திமுகவும், 11,12-ஆவது சுற்றில் தவெகவும் முன்னிலை வகித்தது. தொடா்ந்து மும்முனை போட்டி நிலவி நிலையில், கடைசி 4 சுற்றுகளில் திமுக வேட்பாளா் எம்.ராஜு முன்னிலை வகித்து 8,099 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா்.
2021-ஆம் ஆண்டு திமுக சாா்பில் போட்டியிட்ட கா.ராமச்சந்திரன் 61,820 வாக்குகள் பெற்று வென்றாா் என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்குகள் விவரம்:
எம்.ராஜு (திமுக): 50, 470
அ.ராமு (அதிமுக):42,371
தங்கராஜு (தவெக): 42,225
தீனு (நதக): 4, 695
வித்தியாசம்: 8,099
வேட்பாளா்கள்:6
மொத்த வாக்குகள்: 1,77,782
பதிவான வாக்குகள்: 1,41, 394