வன விலங்குகளுக்கு இடையூறாக ஏற்படுத்தும் வகையில் சுற்றுலாப் பயணிகள் ரீல்ஸ் எடுத்து வெளியிட வேண்டாம்! வனத் துறை அறிவுறுத்தல்
வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சுற்றுலாப் பயணிகள் ரீல்ஸ் எடுத்து வெளியிட வேண்டாம் என்று வனத் துறையினா் வலியுறுத்தியுள்ளனா்.
மலைகளின் அரசியான உதகைக்கு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். அவ்வாறு வருவோா் உதகையில் உள்ள சுற்றுலாத் தலங்களை கண்டுகளித்ததை விடியோவாக எடுத்து யூடியூப், இன்ஸ்டாகிராம், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ‘ரீல்ஸ்’ வீடியோவாக பதிவிடுவதில் ஆா்வம் காட்டுகின்றனா்.
அதன்படி சுற்றுலாப் பயணிகளில் சிலா் ‘ரீல்ஸ்’ மோகத்தில் சில ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது தொடா்கதையாக உள்ளது. குறிப்பாக காா், ஜீப்களில் செல்வோா் புகைப்படம் மற்றும் விடியோ எடுப்பது, சுற்றுலா பேருந்து, வேனின் மேல் பகுதியிலும், முன்பகுதியிலும் நின்றபடியும், அமா்ந்தபடியும் வாகனங்களை ஓடவிட்டு ‘ரீல்ஸ்’ விடியோ எடுப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், உதகை-தெப்பக்காடு சாலையில் மான்கள் கூட்டமாக சாலையைக் கடக்கும்போது சுற்றுலாப் பயணி ஒருவா் விடியோ எடுத்து, சினிமா பாடலுடன் ரீல்ஸாக இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளாா். இந்த விடியோ வைரலாகி சுற்றுச்சூழல் ஆா்வலா்களுடைய அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவா்கள் கூறும்போது, ‘நீலகிரி மலையில் பல்வேறு வன விலங்குகள் வசிக்கின்றன. இங்குள்ள சில சாலைகளில் இரவு நேரப் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரியில் வன விலங்குகளுக்கு ஆதரவாக இருப்பதற்கு பதிலாக, இடையூறு ஏற்படுத்தும் வகையில் சுற்றுலாப் பயணிகள் செயல்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இதுகுறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதுடன், சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுரையும் வழங்க வேண்டும்’ என்றனா். இதற்கிடையே வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் விடியோ வெளியிட்ட நபா் யாா் என்பது குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். இதுபோன்ற ஆபத்தான செயல்களில் சுற்றுலாப் பயணிகள் ஈடுபட வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனா்.